நெருப்பை அணைக்க உதவும் நீரிலிருந்தே நெருப்பை உற்பத்தி செய்ய முடியும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் அவற்றைச் சாத்தியப் படுத்தியுள்ளார் தமிழர் ஒருவர். அவர் யார்? எப்படிச் சாத்தியமாக்கினார் என்பது குறித்து இந்தச் செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.
நீரில் இருந்து ஹைட்ரஜனைத் தயாரிக்க முடியும் என்பது நூறு ஆண்டுகளுக்கு முன்பே கண்டறியப்பட்ட உண்மை. ஆனால் அந்த ஹைட்ரஜனை எரிசக்தியாகப் பயன்படுத்த முடியவில்லையே என்ற குறை நீண்ட ஆண்டுகளாகவே இருந்துவந்தது.
அத்தகைய குறையை போக்க பல ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து ஒரு தீர்வை கண்டு பிடித்திருக்கிறார் தமிழகத்தைச் சேர்ந்த பேலூர் ராமலிங்கம் கார்த்திக். சேலம் மாவட்டம் பேலூரைச் சேர்ந்த இவர் தண்ணீரில் இருந்து ஹைட்ரஜனைப் பிரித்து எடுத்து அதன் மூலம் எரிசக்தியை உருவாக்கி அதனை சாத்தியப்படுத்தியும் சாதனை படைத்திருக்கிறார்.
20 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியின் முடிவில் நீரை எரிபொருளாக மாற்றி அதன் மூலம் கேஸ் அடுப்பு மற்றுமின்றி வாகனங்கள் மற்றும் ஜெனரேட்டர் வரை இயக்குவதற்கான சூழலை உருவாக்கியுள்ளார்.
தன்னுடைய தனித்துவமிக்கப் படைப்பு குறித்து மத்திய அரசிடம் அனுமதி கோரியிருப்பதாகவும், மத்திய அரசின் உரிமம் கிடைக்கப்பெறும் பட்சத்தில் ஜனவரி முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்றும் ராமலிங்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்
ராமலிங்கம் கார்த்திக் கண்டுபிடிப்பிற்குப் பின்னணியில் திரைப்பட நடிகரும், பாஜகவின் நிர்வாகியுமான சரத்குமாரின் பங்களிப்பும் உள்ளது. நீரில் இருந்து எரிசக்தி தயாரிக்கும் நிறுவனத்தின் செயல் இயக்குனராக இருக்கும் சரத்குமார், ராமலிங்கத்தின் படைப்பு குறித்தும் அதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் குறித்தும் மத்திய அரசு அதிகாரிகளிடம் விரிவாகவும், விளக்கமாகவும் எடுத்துரைத்துள்ளார். உலகளவில் பொருளாதாரத்தில் நான்காவது நாடாக இருக்கும் இந்தியா, இக்கண்டுபிடிப்பு மக்கள் பயன்பாட்டிற்கு வந்தால் மேலும் முன்னேற்றம் அடையும் எனவும் அவர்த் தெரிவித்தார்.
பற்றி எரியும் நெருப்பை அணைக்கப் பயன்படுத்தப்படும் நீரில் இருந்தே நெருப்பை உற்பத்தி செய்யும் இந்த ஆராய்ச்சி உலகச் சந்தையை பொருளாதார அளவில் மாற்றியமைக்கும் சக்தியாகக் கருதப்படுகிறது.
உலக நாடுகளின் கவனம் அனைத்தும் ஹைட்ரஜன் பக்கம் அண்மைக்காலமாகத் திரும்பிய நிலையில், அதிலிருந்தே எரிசக்தியை உருவாக்கியிருக்கும் ராமலிங்கம் கார்த்திக்கின் முயற்சி மிகுந்த பாராட்டுதலுக்குரியது.