புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பெருமாள் கோயில்களில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்து, ஏழுமலையானை மனம் உருக வழிபட்டால் செல்வமும், நிம்மதியும் கிடைக்கும் என்பது ஐதீகம். புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
அந்த வகையில், திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள ரங்கநாதர் கோயிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையை ஒட்டி அதிகாலையில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோன்று, திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ஸ்ரீவீரராகவர் பெருமாள் கோயிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி காலை 5 மணிக்கு உற்சவருக்குச் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மக்கள் செல்வ செழிப்போடு இருக்கப் பெருமாள் ரத்னாங்கி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளித்தார்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே காரமடை பகுதியில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த அரங்கநாத பெருமாள் சுவாமி கோயிலில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
தாசர்களுக்கு வழங்கும் பொருட்கள் பெருமாளுக்குச் சென்று சேரும் என்ற ஐதீகத்தின்படி கோயிலுக்கு வௌியே உள்ள தாசர்களுக்குப் பக்தர்கள் காய்கறிகள், அரிசி, பருப்பு போன்றவற்றை வழங்கிச் சென்றனர்.