பழனி ஆண்டவர் கலை கல்லூரி தமிழ் துறை, தமிழக முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளதற்கு அகில பாரத வித்தியார்த்தி பரிஷத் (ABVP) கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ABVP தென் தமிழக மாநில இணை செயலாளர் J.D. விஜயராகவன் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
“மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அருள்மிகு பழனி ஆண்டவர் கலை மற்றும் கலாச்சாரக் கல்லூரியின் தமிழ் துறை, சமீபத்தில் “தமிழக முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) மேற்கொண்டிருப்பதை ABVP வன்மையாக கண்டிக்கிறது.
இந்தச் சங்கம் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் கலைப்பிரிவாக செயல்பட்டு வருவது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். மேலும், அந்த சங்கத்திற்கு அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ பதிவு எண் கூட இல்லாத சூழலில், அரசு கல்வி நிறுவனம் இச்சங்கத்துடன் MoU கையெழுத்திட்டிருப்பது. அரசாங்க விதிமுறைகளுக்கும் முற்றிலும் முரணானது.
கல்வி நிலையங்களின் நோக்கம் மாணவர்களின் கல்வி, திறன் வளர்ச்சி, ஆராய்ச்சி மற்றும் வேலை வாய்ப்புத் திறன்களை மேம்படுத்துவதாக இருக்க வேண்டும். அரசியல் சங்கங்களுடன் இணையும் செயற்பாடுகள் கல்வி நிலையங்களை அரசியல் மேடைகளாக மாற்றி விடும் அபாயம் உள்ளது. இதன் மூலம் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதோடு, கல்வியின் தூய்மையான தன்மையும் ஆபத்துக்குள்ளாகிறது.
அரசு கல்லூரிகள் அரசியல் சார்பற்ற மற்றும் கல்வி சார்ந்த பணிகளை மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என்ற கடமைக்குப் புறம்பாக, இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவது மாணவர்களின் நலனையும், பெற்றோர்கள் கல்வி நிலையங்களில் வைத்துள்ள நம்பிக்கை கேள்விக்குறியாக்குகின்றன. கல்வி துறையின் மீது மக்களின் நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில் நடைபெறும் இந்த முயற்சியை ABVP வன்மையாகக் கண்டிக்கிறது.
கல்வி நிலையங்கள் அரசியலிலிருந்து விலகி, மாணவர்களின் முன்னேற்றத்திற்காக மட்டுமே செயல்பட வேண்டும். அரசியல் இயக்கங்களோ, அவற்றின் துணை அமைப்புகளோ எந்தவொரு ஒப்பந்தமும் ஏற்க முடியாதது.
எனவே, தமிழக முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த MoU உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும் என்பதையும், எதிர்காலத்தில் இதுபோன்ற முயற்சிகள் மீண்டும் இடம்பெறாதவாறு உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதையும் ABVP வலியுறுத்தியுள்ளது.