பணி நிமித்தமாக அமெரிக்காவில் இருக்கும் இந்திய தொழில்துறை நிபுணர்கள் தாயகம் திரும்ப இதுவே சரியான தருணம் என்று ZOHO நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளை சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு அமெரிக்க அரசு வழங்கும் H1B விசாவிற்கான கட்டணத்தை செப்.21 முதல் ஒரு லட்சம் அமெரிக்க டாலராக அதிபர் டிரம்ப் உயர்த்தி இருக்கிறார்.
இதன் காரணமாக இந்தியாவை சேர்ந்த Tech நிபுணர்களை அமெரிக்க நிறுவனங்கள் பணியமர்த்த அதிகளவில் செலவிட வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. எனவே இனி வரும் நாட்களில் அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியில் சேரும் இந்தியர்களின் எண்ணிக்கையும் குறையலாம் என அஞ்சப்படுகிறது.
இந்த நிலையில் தான் ZOHO நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தனது எக்ஸ் பதிவில், இந்தியர்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகள் தாயகத்திலேயே கொட்டிக் கிடப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
ஆண்டுக்கு பல லட்சம் டாலர்கள் சம்பளத்தை நம்பியிருப்பதற்கு பதிலாக இந்தியாவிற்கு திரும்பி உங்கள் வாழ்க்கையை வளமாக்க இதுவே சரியான தருணம் எனவும் ஸ்ரீதர் வேம்பு நம்பிக்கை ஊட்டியுள்ளார்.
தொடக்கத்தில் அந்த முடிவை எடுப்பது கடினமாக இருந்தாலும், தாயகம் திரும்பிய 5 ஆண்டுகளில் சிறந்த எதிர்காலத்தை இந்தியாவிற்கும், உங்களுக்கும் வடிவமைத்துக் கொள்ள முடியும் என தனது எக்ஸ் பதிவில் ஸ்ரீதர் வேம்பு கூறியுள்ளார்.