பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து திருவனந்தபுரம் நவராத்திரி விழாவிற்குக் கொண்டு செல்லப்பட்ட சுவாமி சிலைகள், களியக்காவிளை எல்லையில் கேரள அறநிலையத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.
அப்போது பாரம்பரிய முறைப்படி கேரளப் போலீஸார் துப்பாக்கி ஏந்தி, சிலைகளுக்கு மரியாதை செலுத்தினர்.
கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து ஆண்டுதோறும் திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காகத் தேவாரக்கட்டு சரஸ்வதி தேவி, சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், வேளிமலை முருகன் சுவாமி விக்ரகங்கள் யானை மற்றும் பல்லக்கில் வைத்து ஊர்வலமாகக் கொண்டு செல்லப்படுவது வழக்கம்.
அதன்படி பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து சுவாமி விக்ரகங்கள் புறப்பட்டுச் சென்றன. களியக்காவிளை எல்லையைச் சுவாமி விக்ரகங்கள் அடைந்ததும் பேண்ட் வாத்திய இசை முழங்க, தமிழக – கேரளப் போலீஸார் துப்பாக்கி ஏந்தி அணிவகுப்பு மரியாதை செலுத்தினர். பின்னர் கேரள அறநிலையத் துறையினரிடம் கன்னியாகுமரி மாவட்ட இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் சிலைகளை ஒப்படைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் அம்மாநில ஆளுநர் ஸ்ரீராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு வழிபட்டனர்.