இந்தியாவின் முதல் புல்லட் ரயில் சேவை 2027ம் ஆண்டு டிசம்பர் முதல் வர உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இதனையொட்டி மும்பை – அகமதாபாத் இடையேயான ரயில் பாதையில் 21 கிலோ மீட்டர் நீள சுரங்கம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. பார்க்கலாம் விரிவாக..
நாட்டு மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த இந்தியாவின் புல்லட் ரயில் சேவை, 2027ம் ஆண்டு டிசம்பர் முதல் தொடங்குவதாக அறிவித்திருக்கிறார் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்.
சூரத்திலிருந்து பிலிமோரா வரையிலான புல்லட் ரயில் திட்டத்தின் முதல் பகுதி 2027ம் ஆண்டு செயல்பாட்டுக்கு வரும் என்றும் அவர் கூறியுள்ளார். 2028ம் ஆண்டு தானேவுக்கும், 2029ம் ஆண்டு மும்பைக்கும் புல்லட் ரயிலின் சேவைப் படிப்படியாக விரிவுபடுத்தப்படும் என்றும் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
புல்லட் ரயில் திட்டம் ஜப்பானில் நடந்ததைப் போன்று, இந்திய பொருளாதாரத்தில் பல மடங்கு விளைவை ஏற்படுத்தும் என்றும், ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் ஒரு புல்லட் ரயில் கிடைக்கும் வகையில் ரயிலின் சேவைகள் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ரயில் திட்டம் முழுமைப் பெற்ற பின்னர், புல்லட் ரயில் சேவை ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் கிடைக்கும் என்றும் அவர்க் கூறினார்.
இந்தியாவின் முதல் புல்லட் ரயில் சேவைத் திட்டத்திற்கான பணிகள் 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் துவங்கின. குஜராத்தில் 348 கிலோ மீட்டர், மகாராஷ்டிராவில் 156 கிலோ மீட்டர் என மொத்தம் 508 கிலோ மீட்டர் தூரத்தை உள்ளடக்கியது. விவசாயிகளிடம் இருந்து நிலம் கையகப்படுத்துவதில் இருந்து எழுந்த எதிர்ப்புகள், சட்ட சிக்கல்கள் போன்றவை 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் நிறைவடைய வேண்டிய பணிகளைத் தாமதமாக்கின.
மும்பை, அகமதாபாத் நகரங்களை இணைக்கும் புல்லட் ரயில் திட்டம், 12 ரயில் நிலையங்களை உள்ளடக்கியது. 320 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் இந்த ரயில், 2 மணி நேரம் 7 நிமிடங்களில் பயண இலக்கை அடையும். இதற்கான செலவு ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் என மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், 80 சதவிகித நிதியை ஜப்பான் வழங்குகிறது.
புல்லட் ரயில் வழித்தடத்தில், மகாராஷ்டிரா மாநிலம் கன்சோலி மற்றும் ஷில்பட்டாவை இணைக்கும் 4.88 கிலோ மீட்டர் சுரங்கம் தோண்டும் பணி தற்போது நிறைவடைந்திருக்கிறது.
21 கிலோ மீட்டர் நீளமுள்ள சுரங்கப்பாதையில் 4.88 கிலோ மீட்டர் பகுதியானது, NATM என்ற ஆஸ்திரிய சுரங்கப்பாதை முறையைப் பயன்படுத்தி தோண்டப்பட்டுள்ளது. மீதமுள்ள பகுதி சுரங்கம் துளையிடும் இயந்திரங்களைப் பயன்படுத்தி தோண்டப்படுகிறது. சுரங்கம் தோண்டும் பகுதி சீராக இல்லாத இடங்களில் ஆஸ்திரிய சுரங்க முறைப் பயன்படுத்தப்படுகிறது.
இது மும்பையில் உள்ள பாந்த்ரா-குர்லா வளாகம் மற்றும் ஷில்பட்டா இடையே திட்டமிடப்பட்ட 21 கிலோ மீட்டர் நீள சுரங்கப்பாதையின் ஒருபகுதியாக உள்ளது. இதனை ஜப்பானிய குழு மதிப்பாய்வு செய்து திருப்தி எனக் குறிப்பிட்டிருப்பது இந்தச் சுரங்கத்தின் புதிய மைல் கல்லாகப் பார்க்கப்படுகிறது. மேலும் தானே பகுதியில் கடலுக்கு அடியில் 7 கிலோ மீட்டர் நீள சுரங்கப்பாதையும் அதிகக் கவனம் பெற்று வருகிறது.
அண்மையில் பிரதமர் நரேந்திர மோடியின் இரண்டு நாள் ஜப்பான் பயணத்தின்போது புல்லட் ரயில் திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது. ஜப்பான் தனது அடுத்த தலைமுறைப் புல்லட் ரயிலான E10 ஷின்கான்சனை இந்தியாவிற்கு வழங்க ஒப்புக்கொண்டுள்ளது. இதன் மூலம் ஜப்பானின் E10 புல்லட் ரயிலானது மும்பை – அகமதாபாத் இடையே மின்னல் வேகத்தில் பறக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.