வருவாய் உபரி கொண்ட 16 மாநிலங்களில் உத்தரப்பிரதேசம் முதலிடத்திலும், தமிழகம் உட்பட 12 மாநிலங்களில் வருவாய் பற்றாக்குறை உள்ளதாகவும் சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களின் பொருளாதாரச் செயல்திறன் குறித்து மத்திய தணிக்கையாளர் ஆய்வில், கடந்த, 2022- 23ஆம் நிதியாண்டில் வருவாய் உபரியுடன் 16 மாநிலங்கள் உள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
37 ஆயிரம் கோடி ரூபாய் வரி உபரியுடன் உத்தரப்பிரதேசம் முதலிடத்தில் உள்ளது என்றும், அடுத்தபடியாகக் குஜராத், ஒடிசா, ஜார்க்கண்ட், கர்நாடகா, சத்தீஸ்கர், தெலங்கானா, உத்தராக்கண்ட், மத்தியப் பிரதேசம், கோவா ஆகிய மாநிலங்களில் வருவாய் உபரி உடன் உள்ளன எனவும் கூறப்பட்டுள்ளது.
வடகிழக்கு மாநிலங்களான அருணாச்சலப் பிரதேசம், மணிபூர், மிசோரம், நாகாலாந்து, திரிபுரா, சிக்கிம் ஆகிய மாநிலங்களும் வருவாய் உபரி பட்டியலில் அடங்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
வருவாய் உபரியுடன் கூடிய 16 மாநிலங்களில், 10 மாநிலங்களில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெறுகிறது என்றும், அதே நேரத்தில், 2022-23ஆம் ஆண்டில், 12 மாநிலங்களில் வருவாய் பற்றாக்குறை நிலவியது கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திரா, தமிழகம், ராஜஸ்தான், மேற்குவங்கம், பஞ்சாப், ஹரியானா, அசாம், பீகார், இமாச்சல்பிரதேசம், கேரளா, மகாராஷ்டிரா, மேகாலயா ஆகிய மாநிலங்கள் வருவாய் பற்றாக்குறையைக் கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், மத்திய அரசின் வருவாய் மானியங்களால் மேற்கு வங்கம், கேரளா, இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் வேகமாக மீண்டு வருவதாகவும் சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.