கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் பாகிஸ்தான் விமானப்படை நடத்திய தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 30 பேர் உயிரிழந்துள்ளனர்.
சமீபகாலமாக ஆப்கானிஸ்தானின் எல்லையை ஒட்டியுள்ள மலை மாகாணமான கைபர் பக்துன்க்வாவில் பயங்கரவாதிகளுக்கு எதிராக ராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் தெஹ்ரீக்-இ-தாலிபான் பயங்கரவாதிகள் அங்கு பதுங்கி இருந்ததாகப் பாகிஸ்தான் ராணுவத்திற்குத் தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் அதிகாலை 2 மணியளவில் பாகிஸ்தான் போர் விமானங்கள் திரா பள்ளத்தாக்கில் உள்ள மாட்ரே தாரா கிராமத்தில் எட்டு LS-6 குண்டுகளை வீசி கொடூரத் தாக்குதலை நடத்தியது.
வீடுகள் நொறுங்கிய நிலையில் பெண்கள், குழந்தைகள் உட்பட அப்பாவி பொதுமக்கள் 30 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுதொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குடியிருப்புகள் தரைமட்டமான நிலையில், இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டுள்ளனர். ராணுவம் நடத்திய தாக்குதலில் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.