அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள அனுமன் சிலை குறித்து குடியரசுக் கட்சி தலைவர் ஒருவர் கூறிய கருத்து விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டனில் சுகர்லாண்ட் என்ற பகுதியில் ஸ்ரீ அஷ்டலக்ஷ்மி கோயில் உள்ளது.
இங்கு 90 அடி உயரத்தில் பிரம்மாண்ட அனுமன் சிலை கட்டி முடிக்கப்பட்டு கடந்த வருடம் ஸ்ரீ சின்னஜியர் சுவாமிகள் முன்னிலையில் திறந்து வைக்கப்பட்டது. இச்சிலைக்கு ஒற்றுமையின் சிலை எனவும் பெயரிடப்பட்டது.
இதுதொடர்பாக டெக்சாஸ் குடியரசு கட்சியை சேர்ந்த அலெக்சாண்டர் டங்கன் என்பவர் அனுமன் சிலையின் வீடியோவை பதிவிட்டு கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், நாங்கள் ஒரு கிறிஸ்தவ தேசம் என்றும், அங்கு இந்து கடவுளின் சிலையை ஏன் அனுமதித்துள்ளோம் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
இவரின் கருத்துக்கு இந்து அமெரிக்க அறக்கட்டளை கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. மேலும், அமெரிக்க அரசியலமைப்பு எந்த மதத்தையும் பின்பற்றுவதற்கான சுதந்திரத்தை அவர்களுக்கு வழங்குவதாகவும் பல இணையவாசிகள் அலெக்சாண்டர் டங்கனை சுட்டிகாட்டி பதிவிட்டுள்ளனர்.