புகழ்பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது.
தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தில் உள்ள இந்தக் கோயிலில் நவராத்திரியை ஒட்டி ஆண்டுதோறும் தசரா திருவிழா நடைபெறுவது வழக்கம், அந்த வகையில் இந்த ஆண்டிற்கான விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது.
அதிகாலை 2.30 மணிக்குக் கோயில் நடை திறக்கப்பட்டு சுவாமிக்கும், அம்பாளுக்கும் சிறப்புப் பூஜை நடத்தப்பட்டது.
பின்னர் மங்கல வாத்தியங்களுடன் யானை மீது ஊர்வலமாக எடுத்துவரப்பட்ட கொடிப்பட்டத்தை பக்தர்கள் மனமுருக வழிபட்டனர்.
இதனையடுத்து அலங்கரிக்கப்பட்ட செப்பு கொடிமரத்தில் திருக்கொடி மேள தாளத்துடன் ஏற்றப்பட்டது. அப்போது, ஓம் காளி, ஜெய் காளி என்ற பக்தி கோஷத்துடன் அம்மனை பக்தர்கள் தரிசித்தனர்.