சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே விசாரணைக்குச் சென்ற தலைமை காவலரை மதுபோதையில் சரமாரியாகத் தாக்கிய நபரை போலீசார் கைது செய்தனர்.
வாழப்பாடியை அடுத்த வெள்ளாளகுண்டம் பகுதியில் பாஸ்கரன் என்பவர் மதுபோதையில் தகராறு செய்வதாகக் குடியிருப்பு வாசிகள் அவசர எண் 100-க்கு புகார் தெரிவித்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தலைமை காவலர் சசிக்குமார், மதுபோதையில் இருந்த பாஸ்கரனிடம் விசாரணை செய்தார்.
அப்போது அவர் காவலர் சசிக்குமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் அவரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதில் காயமடைந்த காவலர் சசிக்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பாஸ்கரனை கைதுசெய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.