பிரதமர் மோடியின் மாஸ்டர் ஸ்ட்ரோக்கான திருத்தியமைக்கப்பட்ட புதிய ஜிஎஸ்டி வரி, உண்மையிலேயே நாட்டு மக்களுக்குத் தீபாவளி பரிசாக அமைந்துள்ளது. கார்களின் விலைகள் கணிசமாகக் குறைந்துள்ளதால் பல நடுத்தர மக்களின் கார் வாங்கும் கனவுகள் இந்த நவராத்திரியில் நிறைவேறி உள்ளன. அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
கடந்த 2017ம் ஆண்டு ஜூலை ஒன்றாம் தேதி முதல் GST வரி நடைமுறையில் உள்ளது. 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம், 28சதவீதம் ஆகிய நான்கு அடுக்குகளில் வரி விதிக்கப்பட்டு வந்தன. இந்நிலையில், ஆகஸ்ட் 15 ஆம் தேதி தனது சுதந்திர தின உரையில் இந்தத் தீபாவளியில் மக்களுக்குப் பெரிய பரிசு காத்திருக்கிறது என்றும், விரைவில் GST வரி விதிப்பில் சீர்திருத்தம் கொண்டு வரப்படும் என்றும் அறிவித்தார்.
இந்த ஆண்டு தீபாவளி வரும் அக்டோபர் 20 ஆம் தேதி தான் வருகிறது. அதற்கு முன்னதாகவே, GST 2.0 நடைமுறைக்கு வந்து விட்டது. இதில், 4 அடுக்கு வரி 2 அடுக்குகளாகக் குறைக்கப்பட்டுள்ளது. 12, 28 சதவீத அடுக்குகள் முழுமையாக நீக்கப் பட்டு உள்ளன. 12 சதவீதத்தில் இருந்த 99 சதவீத பொருட்கள் 5 சதவீத அடுக்குக்கும், 28 சதவீத அடுக்கில் உள்ள 90 சதவீத பொருட்கள் 12 சதவீத அடுக்குக்கும் கொண்டு வரப்பட்டுள்ளன.
மேலும் ஆடம்பர மற்றும் புகையிலை, குட்கா, சிகரெட் போன்ற தீங்கு விளைவிக்கும் பொருட்கள் சிறப்பு வரி அடுக்கில் சேர்க்கப்பட்டு அவற்றுக்கு 40 சதவீத வரி விதிக்கப் பட்டுள்ளது. GST 2.0 காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலைகள் கணிசமாகக் குறைந்துள்ளது. குறிப்பாகப் பைக்குகள் மற்றும் கார்களின் விலைகளும் எதிர்பார்க்காத அளவுக்குக் குறைந்துள்ளன.
GST 2.0 நடைமுறைக்கு வந்த நவராத்திரியின் முதல்நாளில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, திருத்தியமைக்கப் பட்ட GST வரி, மக்களுக்கான சேமிப்பு திருவிழா என்றும், இதனால் இந்திய பொருளாதாரத்தில் புதிய சகாப்தம் தொடங்குகிறது என்றும் தெரிவித்தார். நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போட்டி போட்டுக் கொண்டு ஆர்வமாக மக்கள் கார்களை முன்பதிவு செய்துள்ளனர். இந்தியாவில் கார்கள் உற்பத்தி மற்றும் விற்பனையில் முதல் இரண்டு இடத்தில் மாருதி சுசுகி மற்றும் ஹூண்டாய் நிறுவனங்கள் உள்ளன. செப்டம்பர் 22ம் தேதி மட்டும் மாருதி நிறுவனம் 30,000 கார்களை டெலிவரி செய்திருக்கிறது.
கடந்த 35 ஆண்டுகளில் இல்லாத அளவு ஒரே நாளில் கார்கள் விற்பனை மற்றும் கார்கள் டெலிவரி செய்யப்பட்டிருப்பதாக மாருதி சுசுகி நிறுவனம் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது. ஜிஎஸ்டி வரி குறிப்பைத் தொடர்ந்து கார்களின் விலையைக் குறைப்பதாக அறிவிப்பு வெளியிட்டதைத் தொடர்ந்து தினமும் 15,000 கார்கள் விற்பனைக்காக முன்பதிவு செய்வதாகவும் இது வழக்கத்தை விட 50 சதவீதம் அதிகம் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தவிர கார்கள் வாங்குவது தொடர்பாகச் சுமார் 80 ஆயிரத்துக்கும் மேல் வாடிக்கையாளர்கள் விசாரிக்க வந்ததாகவும் கூறியுள்ளது. இதேபோல்,கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத வகையில் ஒரே நாளில் 11 ஆயிரம் கார்களை டெலிவரி செய்திருப்பதாக ஹுண்டாய் நிறுவனமும் கூறியுள்ளது.
நவராத்திரியின் முதல் நாளில் 10,000 கார் டெலிவரிகளையும் 25,000க்கும் மேற்பட்ட விசாரணைகளையும் பதிவு செய்ததாக டாடா கார் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த வரிக்குறைப்பின் விளைவாக, கார் நிறுவனங்களும் வாடிக்கையாளர்களுக்குச் சலுகை வழங்குகின்றன. இதனால், காரகளின் விலை இன்னும் குறைவதால், இந்தப் பண்டிகை காலம் மக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான திருவிழா காலமாகவே அமைந்துள்ளது.