H-1B விசா கட்டணத்தை ஒன்றரை லட்சத்தில் இருந்து 88 லட்சமாக உயர்த்திய அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் நடவடிக்கை புவிசார் அரசியல் போர் என விமர்சிக்கப்படுகிறது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
தற்காலிக அடிப்படையில் அமெரிக்காவுக்குள் நுழைய வெளிநாட்டவர்களுக்குச் சட்டப் பூர்வ அங்கீகாரம் அளிக்கும் ஒரு நடைமுறை தான் H-1B விசா ஆகும். அமெரிக்க தொழில்நுட்பத் துறையின் அபரிதமான வளர்ச்சிக்கு மிக முக்கியமான காரணமாக இந்த H-1B விசா உள்ளது. அமெரிக்காவில் பல்வேறு முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் இந்தியர்கள் இதன் மூலமே பணியாற்றி வருகின்றனர்.
சுமார் 72 சதவீத இந்தியர்களும், 12 சதவீத சீனர்களும் H-1B விசாவில் உள்ளனர். இந்தியாவின் 283 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஐடி துறை H-1B விசாவையே நம்பியுள்ளது. இன்போசிஸ், விப்ரோ மற்றும் TCS போன்ற முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பல ஆண்டுகளாக அமெரிக்காவில் தங்களுக்கு தேவையான திறமையுள்ள சாப்ட்வேர் இன்ஜினியர்களை H-1B விசா மூலமே பணியமர்த்தி வருகின்றனர்.
2025ம் ஆண்டில் 4,70,000-க்கும் மேற்பட்டோர் H-1B விசாவுக்கு விண்ணப்பித்துள்ளனர். கடந்த செப்டம்பர் 19ம் தேதி புதியதாக H-1B விசா விண்ணப்பிக்க ஒரு லட்சம் அமெரிக்க டாலர்கட்டணமாகச் செலுத்தத வேண்டும் என அதிபர் டிரம்ப் அறிவித்தார். தொடர்ந்து,இந்தப் புதியய கட்டணம் கடந்த செப்டம்பர் 21 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
இதனையடுத்து, இன்போசிஸ் பங்குகள் 4.5 சதவீதம் குறைந்துள்ளது. விப்ரோ, TCS போன்ற நிறுவனங்களின் பங்கும் 4 சதவீதம் குறைந்துள்ளது. அமெரிக்க ஊழியர்களைப் பாதுகாப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்று அமெரிக்க அரசு தெரிவித்தாலும், எலான் மஸ்க் உள்ளிட்ட முன்னணி அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனத் தலைவர்கள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் வளர்ச்சியைத் தடுக்கும் எனவும் கூறியுள்ளனர். உண்மையில், இந்தியர்கள் அமெரிக்காவுக்கு உதவவே செய்கிறார்கள் என்றும், சர்வதேச அளவில், அமெரிக்க நிறுவனங்கள் அதிக போட்டித்தன்மையுடன் வெற்றிப்பெற இந்திய தொழில்நுட்ப வல்லுநர்களே பெரிதும் உதவுகின்றனர்.
இதனால், H-1B விசா கட்டண உயர்வு “புவிசார் அரசியல் போர்” என்று கூறப்படுகிறது. தொடக்கத்தில் பாதிப்பு இருந்தபோதிலும், அமெரிக்க H-1B விசா கட்டண உயர்வால் இந்தியா பெரிய அளவில் பயனடைய போகிறது என்று ஜே.பி.மோர்கனின் ஆசிய பொருளாதாரத் தலைவரும், தலைமை இந்தியப் பொருளாதார நிபுணருமான சஜ்ஜித் சினாய் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, ட்ரம்பின் இந்த நடவடிக்கை, அமெரிக்க நிறுவனங்களின் செலவுகளை அதிகரிக்கும் என்றும், அதன் விளைவாக அந்நிறுவனங்கள், இந்தியாவில் உலகளாவிய திறன் மையங்களைத் தொடங்கும் என்றும் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே, மைக்ரோசாப்ட், கூகுள், கோல்ட்மேன் சாக்ஸ், ஜேபி மோர்கன் மற்றும் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்தியாவில் உலகளாவிய திறன் மையங்களை நடத்தி வருகின்றன என்பது குறிப்பிடத் தக்கது.
அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கியிருக்கும் இருக்கும் நிலையில், அதில் H-1B விசா கட்டண உயர்வு குறித்தும் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ட்ரம்பின் விஷயத்தில் எதுவும் இறுதியானது அல்ல என்று கூறும் அரசியல் வல்லுநர்கள் இது இதுவும் மாறலாம் அல்லது, நீதிமன்றத்தால் இந்த உத்தரவு ரத்து செய்யப்படலாம் என்று தெரிவிக்கின்றனர்.