2021, 2022, 2023ஆம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள் மற்றும் பாரதியார், எம்.எஸ்.சுப்புலட்சுமி, பாலசரஸ்வதி ஆகியோர் பெயரில் அகில இந்திய விருதுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், அடுத்த மாதம் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் விழாவில், முதலமைச்சர் ஸ்டாலின் விருதாளர்களுக்கு விருதுகள் வழங்கிக் கௌரவிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலைமாமணி விருது பெறும் கலைஞர்களுக்கு 3 சவரன் தங்கப் பதக்கம் மற்றும் விருதுப் பட்டயம் வழங்கப்படும் என்றும், அகில இந்திய விருது பெறும் கலை வித்தர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு தொகைக்கான காசோலையுடன் 3 சவரன் தங்கப்பதக்கம் வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
அதன்படி 2021ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருது நடிகர் எஸ்.ஜே.சூர்யாவுக்கு வழங்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது சிறந்த நடிகைக்கான கலைமாமணி விருது சாய் பல்லவிக்கு வழங்கப்படும் என்றும், சிறந்த இயக்குநருக்கான விருது லிங்குசாமிக்கு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கலை வித்தகருக்கான இயல் பிரிவில் பாரதியார் விருது முனைவர் முருகேச பாண்டியனுக்கு வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
இசை பிரிவில் எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது கே.ஜே.யேசுதாஸுக்கு வழங்கப்படும் என்றும், நாட்டிய பிரிவில் பாலசரசுவதி விருது பத்மஸ்ரீ முத்துகண்ணம்மாளுக்கு வழங்கப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.