டைலெனால் வலி நிவாரண மருந்து கர்ப்பிணிகள் பயன்படுத்தினால், குழந்தைகள் ஆட்டிசத்தால் பாதிக்கப்படக்கூடும் என அமெரிக்க அதிபர் டொனாலட் டிரம்ப் எச்சரித்திருப்பது, மருத்துவ உலகில் சூடான விவாதத்தை கிளப்பியுள்ளது. டிரம்பின் கூற்று சரியா, மருத்துவ உலகம் என்ன சொல்கிறது என்பதை தற்போது பார்க்கலாம்…
சர்ச்சைகளுக்கு பெயர் போன அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் தற்போதைய பேச்சு, சர்வதேச அளவில் விவாதத்திற்கு வித்திட்டுள்ளது. அண்மையில் செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப், டைலெனால் என்ற வலி நிவாரண மருந்து குறித்து பேசியதுதான் அந்த விவாதத்திற்கு காரணம்.
கர்ப்பிணிகள் டைலெனால் மருந்தை உட்கொண்டால், கருவில் இருக்கும் குழந்தைகளுக்கு ஆட்டிசம் பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பாக குண்டை தூக்கிப் போட்டுள்ளார் டிரம்ப்…. அவரது பேச்சு சமூக வலைதளங்களில் காட்டுத் தீயாய் பரவ, பொதுமக்களிடையே குழப்பத்தையும், அச்ச உணர்வையும் ஏற்படுத்தியது.
அமெரிக்காவில் மிகவும் பிரபலமான மருந்துகளில் ஒன்றாகப் பார்க்கப்படும் டைலெனால் என்ற வலிநிவாரண மருந்தை பொதுமக்கள் சாதாரணமாகப் பயன்படுத்தி வருவதுதான் அதற்குக் காரணம்.
கர்ப்ப காலத்தில் வலி மற்றும் காய்ச்சலைக் குணப்படுத்த அசெட்டமினோஃபென் இன்னும் பாதுகாப்பான வழி என்று கூறும் மருத்துவ வல்லுநர்கள், டிரம்பின் கூற்றுக்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். பிற நாடுகளில் பாராசிட்டமால் போன்று, அமெரிக்காவில் அசெட்டமினோஃபென் (acetaminophen) என்று அழைக்கப்படும் Tylenol வலி நிவாரண மருந்துகளை, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தலைவலி, தசைவலி, காய்ச்சல் போன்றவற்றிற்கு மருந்துச் சீட்டு இல்லாமலேயே பயன்படுத்துகிறார்கள்.
டைலெனால் ஆட்டிசத்துடன் தொடர்புடையதானா? என்பதை கண்டறிவது சிக்கலானது என்றும், முடிவு பெறாதாது என்றும் மருத்துவ உலகம் கூறுகிறது. எனினும் 2024 ஆய்வில், கர்ப்ப காலத்தில் அசிடமினோஃபென் எடுத்துக் கொண்ட தாய்மார்களின் குழந்தைகளிடையே ஆட்டிசம் ஏற்படும் அபாயம் எதுவும் இல்லை என்பது தெளிவுபுடுத்தப்பட்டது.
மருத்துவர்கள் அறிவுறுத்தல்படி எடுத்துக் கொள்ளப்படும்போது கர்ப்பிணிப் பெண்களுக்கு டைலெனால் இன்னும் பாதுகாப்பானது என்றே ஒப்புக்கொள்கிறார்கள். McNeil Laboratories நிறுவனத்தால் 1955ம் ஆண்டு ஆறிமுகப்படுத்தப்பட்ட டைலெனால், 1959ம் ஆண்டு ஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவனத்தால் வாங்கப்பட்டது.
இன்று அதன் துணை நிறுவனமான KENVUE-வால் தயாரிக்கப்படுகிறது. 2010ம் ஆண்டு உற்பத்தி சிக்கல்கள் காரணமாக 136 மில்லியனுக்கும் அதிகமான, குழந்தைகளுக்கான திரவ டைலெனால் மற்றும் பிற தயாரிப்புகளை திரும்பப் பெற்றிருந்தது. இது ஒருபக்கம் இருந்தாலும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் ராபர்ட் எஃப் கென்னடி ஜூனியர் ஆகியோர் மருத்துவத்துறை மீது இதற்கு முன்னரும் சர்ச்சையான கருத்துகளை பதிவிட்டு விமர்சனத்திற்கு ஆளாகியிருக்கின்றனர்.
2017 -21ம் ஆண்டில் டிரம்ப் தனது முதல் பதவி காலத்தில் COVID-19 க்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயினை ஒரு ‘சிகிச்சையாக’ ஊக்குவித்தது சர்ச்சையை கிளப்பியது. பச்சைப் பாலை உட்கொள்வது, ஈ கோலை, லிஸ்டீரியா, கேம்பிலோபாக்டர் மற்றும் உணவு மூலம் பரவும் நோய்களை ஏற்படுத்தும் ஆபத்தான கிருமிகளை கொண்டு செல்லக்கூடும் என வெளிப்படையான எச்சரிக்கை இருந்தபோதிலும் அண்மையில் அமெரிக்க சுகாதாரத்துறை அமைச்சரான ராபர்ட் எஃப் கென்னடி ஜூனியர், பதப்படுத்தப்படாத பால் மனித நுகர்வுக்கு சிறந்தது என்று கூறி சர்ச்சையில் சிக்கியவர்.
ஒரு புழு ஒருமுறை அவரது மூளைக்குள் நுழைந்து அதன் ஒரு பகுதியைச் சாப்பிட்டுவிட்டு பின்னர் இறந்துவிட்டது என்றும் அறிக்கை விட்டிருந்தார். தடுப்பூசிகளுக்கு எதிரான கருத்துகளையும் அவர் வெளியிட்டு வருகிறார்.
அமெரிக்காவில் குழந்தைகளிடையே ஆட்டிசம் பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில், ஐந்து மாதங்களில் அவற்றைக் குணப்படுத்துவதாக சபதம் எடுத்திருந்தார் ராபர்ட் எஃப் கென்னடி ஜூனியர். செப்டம்பர் மாதத்திற்குள், ஆட்டிசம் நோய்க்கு என்ன காரணம் என்பதை அறிந்துகொள்வோம் என்றும் தெரிவித்திருந்தார்.
ஆனால் அதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்ளாமல், மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் மருந்துகளில் ஒன்றின் மீது பீதியை உருவாக்குவது ஏன் என்ற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது.