பெரும்பாலான விமானங்களில் 13வது இருக்கை எண் ஒதுக்கப்படாமல் இருப்பது குறித்த தகவல் இணையத்தில் மீண்டும் வைரலாகியுள்ளது.
விமானத்தில் அடிக்கடி பயணம் செய்பவர்களும், விமான இருக்கையை முன்பதிவு செய்பவர்களும் ஒரு விஷயத்தை நிச்சயம் கவனித்திருப்பார்கள், அதுதான் 13வது இருக்கை எண் ஒதுக்கப்படாமல் இருப்பது. உலகம் முழுவதும் உள்ள நம்பிக்கை மற்றும் உண்மை நிலவரங்களை மதித்தே, விமான சேவை நிறுவனங்கள் இந்த முடிவை எடுத்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிலர், இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாவிட்டாலும், சில பயணிகள், 13வது இருக்கை எண்ணால் சற்று கலக்கம் அடைவதாகவும் கூறப்படுகிறது.
13ஆம் எண்பற்றிய பயம் 1911ஆம் ஆண்டு முதல் இருந்து வருவதாகவும், இந்த 13ஆம் எண் கெடுபயனைக் கொடுக்கும் என்பது, மத ரீதியாகவும், மூடநம்பிக்கையாகவும், வரலாற்றுப் பதிவுகள் மூலமும் உருவானதாகக் கூறப்படுகிறது.
இதேபோல், இத்தாலி, பிரேசில் போன்ற நாடுகளில் 17ஆம் எண் கெடுபயனை அளிக்கும் எண்ணாகப் பார்க்கப்படுகிறது. இது “என் வாழ்க்கை முடிந்துவிட்டது” எனப் பொருள்கொள்ளப்படுகிறது என்பதால் 17ஆம் எண்ணையும் அந்நாட்டு மக்கள் தவிர்த்து விடுவார்களாம்.
இது மட்டுமல்ல, சர்வதேச அளவில் விமானங்களை இயக்கும் நிறுவனங்கள், 13 மற்றும் 17 எண் இருக்கைகளை அமைப்பதே இல்லையாம்.