கொடைக்கானல் அருகே உள்ள கூக்கால் கிராமத்தை அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று பாஜக குழுவினர் நேரில் ஆய்வு செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதியில் இருந்து சுமார் 35 கிலோ மீட்டர் தொலைவில் கூக்கால் கிராமம் அமைந்துள்ளது.
இந்தக் கிராமத்தில் உள்ள துணை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் வராததால் அப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
இது தொடர்பாக மேல்மலை பாஜக ஒன்றிய செயலாளர் இளங்கோவிடம் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். அதனடிப்படையில் திண்டுக்கல் மேற்கு மாவட்ட பாஜக துணை தலைவரும், மருத்துவருமான மதன் தலைமையில் பாஜக-வினர் கூக்கால் கிராமத்தை நேரில் ஆய்வு செய்தனர்.
ஆய்வுக்குச் சென்றவர்களிடம் திமுக ஆட்சியில் தங்களுக்கு எந்தவொரு அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லையென அப்பகுதி மக்கள் குறைகளை அடுக்கினர்.
மேலும், ஊராட்சி மேல்நிலை பள்ளி, பொதுக்கழிப்பிடம் உள்ளிட்டவை சுகாதாரமற்ற முறையில் இருப்பதையும் பாஜக குழுவினர் கண்டறிந்தனர்.
மேலும், சம்மந்தப்பட்ட அதிகாரிகளைத் தொடர்புகொண்டு உரிய நடவடிக்கை எடுக்கவும் அவர்கள் வலியுறுத்தினர்.