அமெரிக்க விசா கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில் தங்கள் நாட்டில் பணிபுரிய இந்தியர்களுக்கு ஜெர்மனி அழைப்பு விடுத்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச் -1பி விசாவுக்கான கட்டணத்தை 88 லட்ச ரூபாயாக உயர்த்தி உத்தரவிட்டார். இதனால் இந்தியாவை சேர்ந்தவர்கள் அமெரிக்கா சென்று பணியாற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து இந்தியர்களை தங்கள் நாட்டுக்கு வருமாறு சீனா, இங்கிலாந்து அழைத்து வரும் நிலையில் தற்போது ஜெர்மனியியும் அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி இந்தியர்களை தங்கள் நாட்டுக்கு வரும்படி இந்தியாவுக்கான ஜெர்மனி தூதர் பிலிப் அக்கர்மேன் அழைப்பு விடுத்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், ஜெர்மனி தனது புலம்பெயர் கொள்கை, ஐடி, மேலாண்மை, அறிவியல், தொழில் நுட்பத்தில் இந்தியர்களுக்கு சிறந்த வேலை வாய்ப்புகளை வழங்கும் வகையில் தனித்து நிற்பதாக தெரிவித்தார்.
ஜெர்மனியில் பணிபுரியும் இந்தியர், ஜெர்மானியரின் சராசரி வருமானத்தை விட அதிகம் சம்பாதிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஜெர்மனிக்கு, இந்தியர்கள் பெரும் பங்களிப்பை வழங்கி வருவதால் அதிக சம்பளம் வழங்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் திறமையான இந்தியர்கள் ஜெர்மனியில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம் என்றும் பிலிப் அக்கர்மேன் தெரிவித்துள்ளார்.