விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் மரணமடைந்த வழக்கில், உதவி ஆய்வாளர் மற்றும் இரண்டு தலைமை காவலர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2009ல் மதுபோதையில் தகராறு செய்த பழனி என்பவரை கோட்டூர்புரம் போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றபோது கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
பின்னர், வீட்டுக்கு அனுப்பப்பட்ட பழனி மரணமடைந்ததால், இது தொடர்பாகப் பழனியின் தந்தை ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தார். மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி புகாரை விசாரித்த வருவாய் கோட்டாட்சியர், பழனியின் மரணத்திற்கு காவல்துறையினரின் தாக்குதல் தான் காரணம் என அறிக்கை தாக்கல் செய்தார்.
வருவாய் கோட்டாட்சியரின் அறிக்கையின்படி கோட்டூர்புரம் காவல் நிலைய குற்றப்பிரிவு உதவி ஆய்வாளராக இருந்த ஆறுமுகம், தலைமை காவலர்களாக இருந்த மனோகரன், ஹரிஹர சுப்ரமணியன் ஆகியோர் மீது கொலை வழக்குபதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி பாண்டியராஜ், காவல்துறையினர் தாக்கியதால்தான் பழனி மரணமடைந்துள்ளது நிரூபணமாகியுள்ளது எனத் தெரிவித்தார்.
மேலும், கொலை குற்றச்சாட்டின் கீழ் 3 பேருக்கு ஆயுள் தண்டனை மற்றும் தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.