13 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து ஸ்கை டைவ் செய்து உலகில் எந்த ஒரு சாதனைக்கும் வயது தடையில்லை என்று நிரூபித்திருக்கிறார் கேரளாவை சேர்ந்த 70 வயது மூதாட்டி ஒருவர்.
இடுக்கி மாவட்டம் கென்னத்தடி பகுதியில் லீலா ஜோஸ் என்ற மூதாட்டி வசித்து வருகிறார். இவர் கடந்த மாதம் துபாயில் சிவில் இன்ஜினியராகப் பணிபுரியும் தனது மகன் அனிஷை பார்க்கச் சென்றுள்ளார்.
அப்போது தனது மகனிடம் ஸ்கை டைவிங் செல்ல வேண்டும் என்ற விருப்பத்தைக் கூறியுள்ளார். ஆரம்பத்தில் அவரது மகன் அனிஷ் தனது தாய் நகைச் சுவையாகச் சொல்கிறார் என்று நினைத்துள்ளார்.
ஆனால் லீலா தனது முடிவில் உறுதியாக இருப்பதை அறிந்த அனிஷ் அவரை ஸ்கை டைவிங் செய்ய அழைத்துச் சென்றுள்ளார்.
தொடர்ந்து 70 வயதில் 13 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து ஸ்கை டைவிங் செய்து சாதனைக்கு வயது ஒரு தடையில்லை என்பதை நிரூபித்துள்ளார்.
இது குறித்து பேசிய லீலா ஜோஸ், தனது வழிகாட்டியுடன் விமானத்தில் இருந்து கீழே குதித்தபோது, மகிழ்ச்சி, உற்சாகம் மற்றும் பயம் உள்ளிட்ட பல உணர்வுகளை ஒரே நேரத்தில் உணர்ந்ததாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் தான் விண்வெளிக்கு செல்லத் தயாராக இருப்பதாகவும், கனவு காண வயது ஒரு பொருட்டில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
இது ஒருபுறமிறக்க உறுதியுடன் தனது தாயின் ஆசையை நிறைவேற்றிய அனிஷையும் பலரும் பாராட்டி வருகின்றனர்.
















