தீப்பெட்டிக்கு ஜி.எஸ்.டி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைத்த மத்திய அரசுக்குக் கோவில்பட்டி நேஷனல் சிறு குறு தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.
தென்மாவட்டங்களில் விருதுநகர், சிவகாசி, சாத்தூர், கோவில்பட்டி, திருவேங்கடம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயத்திற்கு அடுத்தபடியாகத் தீப்பெட்டி தொழிலே முக்கிய வாழ்வாதாரமாக உள்ளது.
ஏற்றுமதி செலவு அதிகரிப்பு காரணமாகத் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வந்துள்ளனர்.
இந்நிலையில் தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கத்தினர் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து தீப்பெட்டிக்கான ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
அவர்களின் கோரிக்கையை ஏற்று 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக மத்திய அரசு ஜிஎஸ்டியை குறைத்துள்ளது. இதற்குத் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இதன் மூலம் தீப்பெட்டி தொழிலாளர்களுக்குக் கூடுதலாக வாரத்தில் 2 நாட்கள் வேலை அளிக்க முடியும் எனவும், தீப்பெட்டி தொழில் நலிவடையாமல் இருக்கும் என்றும் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.