உத்தரப்பிரதேசத்தில் மலைப் பாம்பிடம் சிக்கித் தவித்த பாம்புபிடி வீரரை கிராம மக்கள் பத்திரமாக மீட்டனர்.
முசாபர் நகர் அடுத்த சத்தேடி கிராமத்தில் மோனு என்பவர் பஞ்சர் கடை நடத்தி வருகிறார். அவரது கடைக்குள் 20 அடி நீள மலைப்பாம்பு புகுந்தது.
இதைக் கண்டு அச்சமடைந்த மோனு, பாம்புபிடி வீரரான பிரவீன் பஞ்சலுக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் அங்கு வந்த பாம்புபிடி வீரர் பிரவீன் பஞ்சல், மலைப் பாம்பினை பிடிக்க முற்பட்டார்.
அப்போது எதிர்பாராத விதமாக பிரவீன் பஞ்சலின் கையில் சுற்றிய மலைப் பாம்பு, நெரிக்கத் தொடங்கியது.
பாம்பின் பிடியில் சிக்கித் தவித்த பாம்புபிடி வீரர் பிரவீன் பஞ்சல், வலியால் சிரமப்பட்டார். இதைக் கண்ட மக்கள், நீண்ட நேரம் போராடி பாம்பின் பிடியிலிருந்து, பாம்புபிடி வீரரை மீட்டனர். பின்னர் பாம்பினை பிரவீன் பஞ்சல் வனப் பகுதிக்குள் விடுவித்தார்.