இந்தியாவின் முக்கிய நகரமான பெங்களூருவில் நிலவும் சுகாதார சீர்கேடு தற்போது பேசுபொருளாகியுள்ளது. பெங்களூரு நிர்வாகம் மற்றும் மாநில அரசுக்கு எதிராகப் பலரும் தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். இதுகுறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்.
இந்தியாவின் IT HUB, இந்தியாவின் சிலிக்கான் வேலி என பல பெயர்களில் அழைக்கப்படும் நகரம் பெங்களூரு. தொழில்நுட்பத்துறையில் அதிவேக வளர்ச்சியை கொண்டுள்ள அந்நகரம், பல லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கி வருகிறது. ஆடம்பரம்பான கட்டடங்கள், மிகப்பெரிய மால்கள், மெட்ரோ ரயில் சேவை, மனமகிழ் மன்றங்கள் அனைத்தும் இணைந்து, பெங்களூருவை வளர்ந்த நாடுகளில் உள்ள நகரங்களுக்கு இணையாக மாற்றி வருகின்றன.
மறுபுறம், மிகவும் போக்குவரத்து நெரிசல் கொண்ட நகரகமாகவும் பெங்களூரு உள்ளது. சாலைகளும் மோசமாக உள்ளதாகவும், முக்கியமான இடங்கள் குப்பைகளால் சூழப்பட்டுள்ளதாகவும் தொடர் குற்றச்சாட்டுகளை அந்நகரம் எதிர்கொண்டு வருகிறது. இது தொடர்பாக, Biocon நிறுவனத்தின் நிறுவனர் Kiran Mazumdar-Shaw வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு தற்போது பேசுபொருளாகியுள்ளது.
பொதுமக்களின் அக்கறையற்ற தன்மையாலும், நகர நிர்வாகத்தின் திறமையின்மையாலும் பெங்களூரு அசுத்தமான நகரமாக மாறி வருவதாக Kiran Mazumdar-Shaw குற்றம்சாட்டியுள்ளார். பொதுமக்கள் பொதுஇடங்களில் குப்பைகளை கொட்டுவதை தவிர்த்து, தூய்மையை கடைபிடிக்க உதவ வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். குப்பைகளை அகற்ற தூய்மைப்பணியாளர்களுக்கு உரிய உபகரணங்களை வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ள Kiran Mazumdar-Shaw, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
Kiran Mazumdar-Shaw-ன் இந்த எக்ஸ் பதிவை தொடர்ந்து பெங்ளூருவில் நிலவும் அசுத்தமான சூழலை தற்போது பலரும் விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர். எந்தெந்த பகுதிகள் மோசமான நிலையில் உள்ளன என்பதையும் அவர்கள் பட்டியலிட்டு வருகின்றனர். மெட்ரோ ரயில் நிலையம் முதல் கதிரேனஹள்ளி வரையிலான பனசங்கரி பகுதி சுகாதார சீர்கேட்டுடன் உள்ளதாகப் பயனர் ஒருவர் தெரிவிக்க, சாக்கடைகள் முறையாகச் சுத்தம் செய்யப்படுவதில்லை என மற்றொருவர் குற்றம்சாட்டியுள்ளார்.
ஒருகட்டத்தில் நெட்டிசன்களின் குற்றச்சாட்டுகள் மாநில அரசை நோக்கி நகர்ந்தன. சேகரிக்கப்படும் குப்பைகள் முறையாக மறுசுழற்சி செய்யப்படுவதில்லை என கூறும் நெட்டிசன்கள், கழிவு மேலாண்மை முறை முற்றிலும் தோல்வியடைந்துள்ளதாகச் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். நாட்டில் அதிக வரி வசூலிக்கும் நகரை, அதன் அதிகாரிகள் அலட்சியாகக் கையாண்டு வருவதாகவும், Outer Ring Road போன்ற முக்கிய பகுதிகளில்கூட நடைபாதைகள் முறையாக இல்லை எனவும் அவர்கள் குற்றச்சாட்டி வருகின்றனர்.
இந்தச் சூழலில், பெங்களூருவின் சாலைகள் மோசமாக உள்ளது குறித்து உள்நோக்கத்துடன் கருத்து பகிரப்படுவதாகவும், டெல்லியின் முக்கிய சாலைகளே மோசமாகத்தான் உள்ளதாகவும், கர்நாடக துணை முதலமைச்சர் டிகே சிவக்குமார் அண்மையில் கருத்து தெரிவித்திருந்தார். அவரின் அந்த அலட்சியமான பேச்சையும் சுட்டிக்காட்டி நெட்டிசன்கள் தற்போது விமர்சித்து வருகின்றனர்.
















