வேலூரில் கடத்தப்பட்ட சிறுவன் மீட்கப்பட்ட நிலையில், ஒருவரை கைது செய்துள்ள போலீசார் தப்பியோடிய மற்றொரு நபரை தேடி வருகின்றனர்.
குடியாத்தம் காமாட்சி அம்மன் பேட்டை பவள தெருவை சேர்ந்த வேணு என்பவர் தனது 4 வயது மகன் முகேஷை உணவு இடைவேளைக்காகப் பள்ளியில் இருந்து வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.
அப்போது வீட்டின் வெளியே சிறுவன் நின்றிருந்தபோது அங்கு வந்த மர்ம நபர்கள், வேணு முகத்தில் மிளகாய் பொடியைத் தூவி கர்நாடக பதிவெண் கொண்ட காரில் கடத்தியுள்ளனர். தந்தை கண்முன்னே குழந்தையை, ஒரு கும்பல் கடத்தி சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்பட்டுத்தியது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அனைத்து காவல் நிலையங்களுக்கும் தகவல் கொடுத்து மாவட்ட மற்றும் மாநில எல்லைகளில் ரோந்து பணியைத் தீவிரப்படுத்தினர்.
மேலும், 6 தனிப்படை அமைத்துத் தீவிர தேடுதல் வேட்டையில் போலீசார் களமிறங்கினர். இந்நிலையில் மாதனூர் பகுதியில் பெங்களூரு – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலத்திற்கு அருகே சிறுவன் முகேஷ் தனியாக நின்று கொண்டிருப்பதாகப் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்குச் சென்ற தனிப்படை போலீசார் சிறுவனை பத்திரமாக மீட்டனர்.
சிறுவன் கடத்தப்பட்ட விவகாரத்தில் காமாட்சி அம்மன் பேட்டை பகுதியைச் சேர்ந்த பாலாஜி என்பவரை மாதனூர் அருகே கைது செய்த போலீசார், தப்பியோடிய விக்கி என்பவரைத் தீவிரமாக தேடி வருகின்றனர். இதனிடையே மீட்டகப்பட்ட சிறுவனை பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.