ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேச அணியை வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
துபாயில் நடைபெற்ற சூப்பர் – 4 சுற்று ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்கதேச அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி, 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது. அதிரடியாக விளையாடிய அபிஷேக் சர்மா 37 பந்துகளில் 75 ரன்கள் குவித்தார்.
169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய வங்கதேச அணி 19 புள்ளி 3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 127 ரன்கள் மட்டுமே எடுத்துத் தோல்வியடைந்தது. 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி பைனலுக்கு முன்னேறி அசத்தியுள்ளது.
இதனிடையே, 25 பந்துகளில் அரைசதம் அடித்த இந்திய வீரர் அபிஷேக் சர்மா டி-20 கிரிக்கெட்டில் சாதனை படைத்துள்ளார். சர்வதேச டி-20 கிரிக்கெட்டில் 25 அல்லது அதற்குக் குறைவான பந்துகளில் அதிக அரைசதம் அடித்த வீரர்களின் பட்டியலில் யுவராஜ் சிங்கை முந்தி அசத்தியுள்ளார்.