மரக்காணத்தில் சிறப்புச் சலுகை விலையில் பொருட்களை வழங்கிப் பெண்களிடம் நூதன முறையில் பல லட்சம் ரூபாய் மோசடி செய்த 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
புதுச்சேரியை ஒட்டிய பெரிய முதலியார்பட்டியில், 10 பேர் கொண்ட கும்பல் ஒன்று, கைவரிசையை காட்டியுள்ளது. சலுகை விலையில் வீட்டு உபயோகப் பொருட்களை வழங்குவதாகக் கூறி மோசடியை அரங்கேற்றியுள்ளது.
கிராம பெண்களை குறிவைத்த இந்தக் கும்பல், தாங்கள் வழங்கும் அதிர்ஷ்ட கூப்பன்களில் நம்பர் இருந்தால், 10 ஆயிரத்து 700 ரூபாய் மதிப்புள்ள பொருட்களை ஆறாயிரத்து 700 ரூபாய் என்ற தள்ளுபடி விலையில் வழங்குவதாக விளம்பரம் செய்துள்ளது.
அவ்வாறு வழங்கப்படும் பொருட்களில் வெள்ளிக் கொலுசு இருந்தால், அதற்குப் பணம் தர வேண்டாம் என்றும் மோசடி கும்பல் கூறியுள்ளது. இதை நம்பிய பெண்கள், பொருட்களை போட்டிப்போட்டுக் கொண்டு வாங்கிச் சென்றனர்.
ஆனால் அந்தக் கும்பல் வழங்கியது போலி கொலுசு என்பது தெரியவந்ததல், அதிர்ச்சியடைந்த பெண்கள், மரக்காணம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதையடுத்து அங்குச் சென்ற போலீசார், பொருட்களை மும்முரமாக விற்பனை செய்து கொண்டிருந்த 10 பேரையும் மடக்கிப் பிடித்த்கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து வாகனங்கள், வீட்டு உபயோக பொருட்கள், போலி கொலுசுகளை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.