குலசை முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவிற்கு 350 பேருந்துகள் இயக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகில் உள்ள குலசேகரன்பட்டினத்தில் உள்ள முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் துவங்கியது.
12 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும் இந்த தசரா திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகிஷா சூரசம்ஹாரம் வரும் 2-ம் தேதி கோவில் கடற்கரையில் நடைபெற உள்ளது.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத், கோயில், கடற்கரை, மருத்துவமனை, தற்காலிக பேருந்து நிறுத்தம், வாகன நிறுத்துமிடங்களை அதிகாரிகளுடன் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் கோவில் வளாகத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிகாரிகளுடன் தசரா திருவிழா முன்னேற்பாடுகள்குறித்து ஆட்சியர் ஆலோசனை மேற்கொண்டார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர், சூரசம்ஹாரம் நிகழ்ச்சியில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவித்தார்.