வால்பாறை அருகே எஸ்டேட் தொழிலாளர்களை தாக்க வந்த கரடியைக் குடைவைத்து விரட்டி, உயிர் தப்பிய சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.
கோவை மாவட்டம், வால்பாறை அருகே பாரளை எஸ்டேட் பகுதியில் கரடியின் நடமாட்டம் அதிகரித்து வரும் நிலையில், அதிகாலையில் எஸ்டேட் உதவி மேலாளரின் அலுவலக வளாகத்தில் கரடி ஒன்று நீண்ட நேரம் ஓய்வெடுத்துள்ளது.
பின்னர், காலை 7 மணியளவில், அங்குள்ள தேயிலை தொழிற்சாலை பகுதியில் திடீரெனப் புகுந்த கரடி, அங்கு நின்று கொண்டிருந்த தொழிலாளர்களைத் தாக்க முயன்றுள்ளது. இதனைக் கண்ட சக தொழிலாளர்கள் கையில் வைத்திருந்த குடையை விரித்துக் கரடியை விரட்டினர்.
பின்னர், அங்கிருந்து ஓடிய கரடி புதருக்குள் சென்று மறைந்த சம்பவம் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவானது.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், தொழிற்சாலை பகுதியில் சுற்றித்திரியும் கரடியைப் பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.