தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், பதவி உயர்வு பாதிக்கப்படுவதாக அரசு மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அரசு மருத்துவர்கள் சங்கம் வெளியிட்டுள்ள தகவலில், மருத்துவக் கல்வி இயக்குநரகத்தில் குறைந்தது 35 சதவீதம் மருத்துவர் பணியிடங்கள் காலியாக உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலப்பணியிடங்கள் காரணமாக மருத்துவ சேவைகளின் தரம் பாதிக்கப்படுவதாகவும், மாநிலம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை தாமதமாக நடைபெறுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
மருத்துவக்கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளில் உதவியாளர், இணை பேராசிரியர்கள் போன்ற பதவிக்கு நேரடி ஆட்சேர்ப்பு இல்லை என்றும், ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவ அதிகாரிகளாக சேரும் மருத்துவர்கள், முதுகலை பட்டம் பெற்ற பிறகு மருத்துவக்கல்லூரிகளில் உதவி பேராசிரியர்களாக நியமிக்கப்படுகிறார்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
காலியிடங்களை நிரப்ப, ஒவ்வொரு ஆண்டும் இணைப் பேராசிரியர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கான பதவி உயர்வு கவுன்சிலிங்கை அரசு முறையாக நடத்த வேண்டும் எனவும் அரசு மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.