திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரமோற்சவத்தின் 3ஆம் நாள் நிகழ்ச்சியில் மலையப்பசுவாமி சிம்ம வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த 25ஆம் தேதி பிரம்மோற்சவ விழா கோலாகலமாக தொடங்கியது. வரும் 2ஆம் தேதி வரை நடைபெறும் பிரம்மோற்சவ விழாவில் நாள்தோறும் மலையப்பசுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.
முதல் நாள் நிகழ்ச்சியில் பெரிய சேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் மலையப்பசுவாமி மாடவீதிகளில் வலம் வந்தார். 2ஆம் நாள் நிகழ்ச்சியில் சின்ன சேஷ வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த மலையப்ப சுவாமி, இரவு அன்னப்பறவை வாகனத்தில் வெண்பட்டு அணிந்து, கைகளில் வீணையேந்தி பவனி வந்தார்.
இந்நிலையில், 3ஆம் நாள் பிரம்மோற்சவ விழாவில், மலையப்ப சுவாமி சிம்ம வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தார். அப்போது, பக்தர்கள் நடனமாடியும், பஜனைகள் செய்தும், நாலாயிர திவ்ய பிரபந்தம் பாடியபடியும் ஊர்வலமாக சென்றனர்.