சென்னை அண்ணா சதுக்கம் அருகே அரசுப் பேருந்து ஓட்டுநருக்குத் திடீரென வலிப்பு ஏற்பட்டதால், கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, 2 ஆட்டோக்கள்மீது அடுத்தடுத்து மோதியது.
சென்னையை சேர்ந்த மோகன் என்பவர் கவியரசு கண்ணதாசன் நகர் பேருந்து நிலையத்திலிருந்து அண்ணா சதுக்கம் வரை செல்லும் 2A தடம் எண் பேருந்தை இயக்கி வந்துள்ளார்.
அண்ணா சதுக்கம் வந்தபின்னர், கண்ணதாசன் நகரை நோக்கிப் பேருந்து புறப்பட்டபோது மோகனுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு ஆட்டோக்கள்மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.
இதில், காயமடைந்த 2 ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் அரசுப் பேருந்து ஓட்டுநர் ஆகியோர் ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்துகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.