சீனாவில் “எலும்பை கரைக்கும் நீர்” என்ற புனைப் பெயரால் அழைக்கப்படும் ஹைட்ரோ ஃபுளோரிக் அமிலம் ஒரு பெண்ணின் உயிரை பறித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹாங்ஜோ நகரைச் சேர்ந்த Tu என்ற 52 வயதான பெண், அங்குள்ள மலைப்பகுதி வழியாக நடந்து சென்றுள்ளார். அப்போது ஒரு சிறு கண்டெய்னரில் இருந்து தரையில் கொட்டிக்கிடந்த ஹைட்ரோ ஃபுளோரிக் அமிலத்தை அவர் தவறுதலாக மிதித்துள்ளார்.
இதனால் கால்களில் கடுமையான வீக்கம் ஏற்பட்ட நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவருக்கு அடுத்தடுத்து பல்வேறு உறுப்புகள் செயலிழந்தன. இதனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த அசம்பாவிதம் நேர்ந்த பகுதியில் இருந்து அமிலம் நிறைக்கப்பட்ட மேலும் இரு சிறிய ரக கண்டெய்னர்கள் கண்டெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பாகப் போலீசார் நடத்திய விசாரணையில் கடந்த 2015-ம் ஆண்டு, சுவரை சுத்தம் செய்ய அந்த அமிலத்தை பயன்படுத்திய பணியாளர்கள் அவற்றை அங்கேயே விட்டுச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.
அதனடிப்படையில் அந்த பணியாளரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அபாயகரமான அமிலத்தை அலட்சியமாகக் கையாண்டதற்காக அவருக்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், உலோகங்கள், கண்ணாடி, சிலிகான் போன்றவற்றைக்கூட கரைக்கும் ஆற்றல் கொண்ட ஹைட்ரோஃபுளோரிக் அமிலம், மனித உடலில் பட்டால் பெரும் பாதிப்பை விளைவிக்கும் எனவும், பாதுகாப்பு உபகரணங்களின்றி அதனை பயன்படுத்தக் கூடாது என்றும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.