முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடியில் காளி ஊர்வலத்தை இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தொடங்கி வைத்தார்.
இந்துக்களின் பண்டிகைகளில் ஒன்றான தசரா திருவிழா, மைசூருக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் உள்ள முத்தராம்மன் கோயிலில் வெகு விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம்.
அந்த வகையில், முத்தராம்மன் கோயிலில் கடந்த 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில், நாள்தோறும் பக்தர்கள் பல்வேறு வேடமணிந்து தெருக்களில் ஊர்வலமாக சென்றனர். இந்நிலையில், ருத்ர தர்மா சேவா சார்பில் காளி ஊர்வலத்தை இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி – பாளை சாலையில் உள்ள இசக்கியம்மன் கோயில் முன்பு தொடங்கிய ஊர்வலம் சிவன் கோயிலில் நிறைவடைந்தது. இந்த ஊர்வலத்தில், பாலியல் குற்றங்கள் நீங்கிட வேண்டி 508 பெண் பக்தர்கள் சூலம் ஏந்தியும், அக்னி சட்டி ஏந்தியும் சென்றனர். ஊர்வலத்தில் பிரம்மாண்டமான அம்மன் மற்றும் விஷ்ணு சிலைகள் எடுத்து செல்லப்பட்ட நிலையில், பல்வேறு கலைநிகழ்ச்சிளும் நடைபெற்றன.