மிக்-21 போர் விமானங்கள் தேசத்தின் பெருமை எனப் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
சண்டிகரில் நடைபெற்ற மிக்-21 ரக விமானங்களுக்குப் பிரியா விடை அளிக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மிக்-21 ரக விமானங்கள் இந்தியாவின் வீரதீர செயல்களுக்குச் சான்றாக விளங்கியது எனக் கூறினார்.
1971ல் பாகிஸ்தான் உடனான போர், கார்கில் மோதல், பாலகோட் வான்வழித் தாக்குதல் மற்றும் ஆப்ரேஷன் சிந்தூர் வரை மிக்-21 ரக விமானங்கள் நமது பாதுகாப்புப் படைகளுக்கு மிகப்பெரிய பலத்தை வழங்கியது எனத் தெரிவித்தார்.
மிக்-21 வெறும் விமானம் அல்ல, அது இந்தியா-ரஷ்யா உறவுகளுக்கு ஒரு சான்று எனக் குறிப்பிட்ட ராஜ்நாத் சிங், 1971ல் பாகிஸ்தானுடனான போரின்போது டாக்காவில் உள்ள ஆளுநர் மாளிகையைத் தாக்கி வங்கதேசம் பிரிய வித்திட்டது எனத் தெரிவித்தார்.
மிக்-21 ரக விமானங்கள் நமது தேசியப் பெருமை மற்றும் தைரியம், தியாகம் எனப் புகழாரம் சூட்டினார். மேலும், மிக்-21 ரக விமானங்கள் நம்பிக்கையை வடிவமைத்தது, உத்தியை வலுப்படுத்தியது மற்றும் உலக அரங்கில் இந்தியாவை நிலைநிறுத்தியது என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.