சர்வதேச இயற்பியல் ஒலிம்பியாட் வெற்றிக்குப் பின்னர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சிறுவன் புகைப்படம் எடுத்திருப்பது உலகளவில் கவனம் பெற்றுள்ளது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சிறுவன் யார் என்பதை தற்போது பார்க்கலாம்.
கலிபோர்னியாவைச் சேர்ந்த 17 வயதே ஆன இந்திய வம்சாவளியை சேர்ந்த சிறுவன் அகஸ்த்யா கோயல்தான், 2025 சர்வதேச இயற்பியல் ஒலிம்பியாட்டில், அமெரிக்க இயற்பியல் அணி 5 தங்கப்பதக்களை வென்று வரலாற்று சிறப்புமிக்க சாதனை படைக்கக் காரணமாய் இருந்தவர். சர்வதேச இயற்பியல் ஒலிம்பியாட் என்பது உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் அறிவுக்கூர்மையை சோதிக்கும் மதிப்புமிக்க போட்டியாகக் கருதப்படுகிறது.
ஆண்டுதோறும் பல்வேறு நாடுகளில் நடத்தப்படும் இந்தப்போட்டி, 1967ம் ஆண்டு போலந்தில்தான் முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. இயற்பியலில் மாணவர்களின் அறிவுக்கூர்மை, சிந்தனை, சிக்கலைத் தீர்க்கும் திறன்கள் போன்றவற்றை மதிப்பிடுவதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது.
ஒவ்வொரு நாடும், தேசிய ஒலிம்பியாட் மூலம் மாணவர்களைத் தேர்வு செய்து இது போன்ற போட்டிகளில் பங்கேற்க செய்கிறது… அப்படித்தான் ஜூலை மாதம் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடந்தது சர்வதேச இயற்பியல் ஒலிம்பியாட் போட்டி… 80 நாடுகளைச் சேர்ந்த அணிகள் இதில் பங்கேற்ற நிலையில், அமெரிக்க இயற்பியல் அணி சார்பில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அகஸ்த்யா கோயல், ஆலன் லீ, ஜோசுவா வாங், ஃபியோடர் மற்றும் பிரையன் ஜாங் போன்றோர் கலந்து கொண்டனர்.
இதில் இந்திய வம்சாவளி மாணவர் அகஸ்த்யா கோயல் உதவியுடன் அமெரிக்கா 5 தங்கப் பதக்கங்களை அள்ளியது… சாதனை வெற்றியைத் தொடர்ந்து ஐந்து மாணவர்களையும் வெள்ளை மாளிகைக்கு வரவேற்று பாராட்டியிருக்கிறார் அமெரிக்க அதிபர் டிரம்ப்… அவர்களுடன் மகிழ்ச்சியாகப் புகைப்படமும் எடுத்துக் கொண்டிருக்கிறார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள டிரம்பின் மூத்த உதவியாளரான மைக்கேல் கிராட்சியோஸ், அமெரிக்க இயற்பியல் அணியை வெள்ளை மாளிகைக்கு வரவேற்பதில் பெருமிதம் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த மேதைகள் 5 தங்கப்பதக்களை வென்றிருப்பது வரலாற்றில் மிகச் சிறந்த தருணம் என்றும் பாராட்டியுள்ளார்.
இந்திய வம்சாவளி மாணவர் அகஸ்த்யா கோயலின் தந்தை ஆஷிஸ் கோயல், ஸ்டான்போர்ட்டு பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகிறார்.அகஸ்த்யா கலிபோர்னியாவின் பாலோ ஆல்டோ பகுதியில் உள்ள Henry M. Gunn உயர்நிலைப்பள்ளியில் படித்து வரும் நிலையில், அறிவியல் போட்டிகளில் வளர்ந்து வரும் நட்சத்திரமாகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறார்.
பாரிஸில் நடந்த சர்வதேச ஒலிம்பியாட் போட்டியில் 34 பதக்கங்களை அள்ளிய அவர், அமெரிக்க அணி 5 பதக்கங்களை வெல்லவும் தனது பங்களிப்பை வழங்கினார். இயற்பியலை தாண்டியும் அகஸ்த்யாவின் சாதனைகள் நீளுகின்றன. 2022 முதல் 2024ம் ஆண்டு வரை USACO இறுதிப்போட்டியாளராக இருந்தவர். 2023ம் ஆண்டு அமெரிக்க இயற்பியல் ஒலிம்பியாட்டில் வெள்ளிப் பதக்கம் வென்றவர்.
2023ம் ஆண்டு எலைட் கணித ஒலிம்பியாட் திட்டத்தில் பங்கேற்று PRIME-USA-க்கு பங்களிப்பை வழங்கினார். 2021 மற்றும் 2024ம் ஆண்டுகளுக்கு இடையே அகஸ்த்யா, Euler Circle-லில் பகுதிநேரமாகப் பணியாற்றினார். பின்னர் The Australasian Journal of Combinatorics வெளியிட்ட கணித கட்டுரையை இணைந்து எழுதியிருக்கிறார். இந்தி மற்றும் ஸ்பானிஷ் உள்பட பல மொழிகளைப் பேசும் அவர், டென்னிஸ், மலையேற்றம், வானியல் பற்றி ஆய்வு, பாடுவது, பியானோ, கிட்டார் போன்ற இசைக்கருவிகளை இசைப்பது எனப் பன்முகத்தன்மையை கொண்டிருக்கிறார்.
அதுமட்டுமின்றி Gunn Board Game Club, Gunn Competitive Programming Club, varsity tennis team, Gunn Choir போன்ற குழுக்களிலும் தீவிர ஈடுபாடு காட்டி வருகிறார். அவரது சாதனைகள், பன்முகத் தன்மை போன்றவை அமெரிக்க இயற்பியல் குழுவுக்கு அங்கீகாரத்தை பெற்றுத் தந்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
















