60 வருடங்களுக்கும் மேலாக இந்திய விமானப்படையின் முதுகெலும்பாகத் திகழ்ந்த புகழ்பெற்ற மிக்-21 போர் விமானங்கள், இந்திய விமானப்படையிலிருந்து அதிகாரபூர்வமாக ஓய்வு பெற்றன.
மிக்-21 சோவியத் யூனியனில் மிகோயன்-குரேவிச் வடிவமைப்பகத்தால் உருவாக்கப்பட்ட ஒரு supersonic ஜெட் போர் விமானம். இவை இடைமறிப்பு விமானங்களாகவும் பயன்படுத்தப்பட்டு வந்தன. இந்திய விமானப்படையில் 1963ஆம் ஆண்டு மிக்-21 விமானங்கள் சேர்க்கப்பட்டன.
சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக, இந்தியாவின் வான் பாதுகாப்புக்கு முதுகெலும்பாக இருந்து வந்தவை மிக்-21 விமானங்கள். 1965 மற்றும் 1971ஆம் ஆண்டுகளில் பாகிஸ்தானுடன் நடந்த போர்கள், 1999ஆம் ஆண்டு கார்கில் போர் மற்றும் 2019ஆம் ஆண்டு பாலகோட் வான்வழித் தாக்குதல் போன்ற முக்கியமான ராணுவ நடவடிக்கைகளில் மிக்-21 விமானங்கள் முக்கியப் பங்கு வகித்தன.
சுமார் 11,000க்கும் மேற்பட்ட மிக்-21 விமானங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. உலக அளவில் மிக அதிக எண்ணிக்கையில் தயாரிக்கப்பட்ட சூப்பர்சோனிக் விமானம் என்ற பெருமையைப் பெற்றது.
சண்டிகரில் உள்ள விமானப்படை நிலையத்தில் நடந்த பிரியாவிடை விழாவில், Panthers என்ற பெயர் கொண்ட 23-வது படைப்பிரிவைச் சேர்ந்த கடைசி மிக்-21 ஜெட் விமானத்திற்கு ஓய்வு அளிக்கப்பட்டது. 1963-ல் முதன்முதலில் சண்டிகரில் சேர்க்கப்பட்ட மிக்-21 விமானங்கள், அதே இடத்தில் ஓய்வு பெற்றது ஒரு வரலாற்று நிகழ்வாகக் கருதப்படுகிறது.