பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பது பைத்தியக்காரத்தனம் என ஐ.நா சபையில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஆவேசத்துடன் கூறினார்.
இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போர் தொடர்ந்து நடைபெற்று வரும் சூழலில் நியூயார்க்கில் நடைபெற்ற ஐ.நா சபை கூட்டத்தில் நெதன்யாகு உரையாற்றினார். அப்போது ஹமாஸ் அமைப்பினர் தங்கள் குழந்தைகளிடம் யூதர்களை வெறுக்க வேண்டும் எனவும் இஸ்ரேலை அழிக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுப்பதாகவும் குற்றம்சாட்டினார்.
இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் ஜெருசலேம் இருந்தபோது அங்கு 80 சதவீதத்திற்கும் அதிகமான கிறிஸ்வர்கள் வாழ்ந்ததாகவும், ஆனால் பாலஸ்தீனம் கட்டுப்பாட்டை எடுத்துக் கொண்ட பிறகு 20 சதவீதத்திற்கும் கீழ் குறைந்துவிட்டதாகவும் சுட்டிக்காட்டினார்.
இப்படிப்பட்டவர்களுக்கு தனி நாடு அந்தஸ்து கொடுக்க வேண்டுமா எனவும் நெதன்யாகு கேள்வி எழுப்பினார். பாலஸ்தீனத்திற்கு தனி நாடு அங்கீகாரம் வழங்குவது பைத்தியக்காரத்தனம் எனவும் அதனை இஸ்ரேல் ஒருபோதும் அனுமதிக்காது எனவும் திட்டவட்டமாக கூறினார்.
காசாவில் இனப்படுகொலை செய்வதாக இஸ்ரேல் மீது கூறப்படும் குற்றச்சாட்டு பொய் எனவும் மக்களுக்காக வழங்கும் உணவுப் பொருட்களை ஹமாஸ் அமைப்பினர் திருடுவதாகவும் நெதன்யாகு குற்றம்சாட்டினார்.