திருச்சுழி அருகே பழமை வாய்ந்த சிவன் கோயிலில் பழங்கால தங்க தகடுகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே எஸ்.கல்விமடை கிராமத்தில் உள்ள ஆயிரத்து 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருநாகேஷ்வரமுடையார் கோயில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்த கோயிலில் உள்ள பழைய கட்டடங்கள், சிலைகள் சேதமடைந்து காணப்பட்ட நிலையில், திருப்பணிகள் மேற்கொள்ள தமிழக அரசு 2 கோடியே 10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியது.
இந்நிலையில், கோயிலின் திருப்பணிகளுக்காக சிலைகள் மற்றும் சிவ லிங்கத்தினை நகர்த்தி பள்ளம் தோண்டும் பணி நடைபெற்றது. அப்போது மனித உருவம் பொறிக்கப்பட்ட சுமார் 16 புள்ளி 600 கிராம் எடையுள்ள தங்க தகடுகள் கண்டெடுக்கப்பட்டன.
இந்த தங்க தகடுகளை மீட்டு பத்திரப்படுத்திய அறநிலையத்துறை அதிகாரிகள், திருப்பணிகள் நிறைவடைந்த பிறகு மீண்டும் தங்க தகடுகள் வைத்து சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும் என தெரிவித்துள்ளனர்.