வங்கதேசத்தில் நடந்த வன்முறையில் 3 பழங்குடியினர்கள் கொல்லப்பட்டதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வங்கதேசத்தின் காக்ராச்சாரி மாவட்டத்தின் குய்மாரா உபாசிலா பகுதியில் பழங்குடியின பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக கூறி, ஜும்மு மாணவர்கள் அமைப்பினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது.
பாலியல் வன்கொடுமைக்கு எதிராக பேரணியாக செல்ல முயன்ற மாணவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியுள்ள நிலையில், பழங்குடியினருக்கும் வங்காளிகளுக்கும் இடையே மோதல்கள் வெடித்தன.
இந்த வன்முறையில் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த 3 பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் ராணுவ மேஜர், காவல் அதிகாரிகள் உட்பட 13 பேர் காயமடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், விசாரணைக்குப் பிறகு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதுவரை அனைவரும் அமைதி காக்க வேண்டும் எனவும் உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.