பொள்ளாச்சியில் ஆங்கில வெள்ளரி விவசாயத்தில் ஈடுபட்டு வரும் இளம் விவசாயி ஒருவர், லட்சங்களில் வருமானம் ஈட்டி வருகிறார். அவர் குறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.
பொள்ளாச்சி என்றாலே அனைவரும் முதலில் நினைவுக்கு வருவது, தென்னை மரங்கள்தான். தமிழகத்தில் மட்டுமல்ல அண்டை மாநிலங்களிலும் பொள்ளாச்சி தேங்காய்களுக்கும், இளநீருக்கும் தனி மவுசு உள்ளது.
ஆனால், கடந்த சில ஆண்டுகளாகப் பொள்ளாச்சியில் தென்னை சாகுபடி தொடர்ந்து பாதிப்பைச் சந்தித்து வருகிறது. குறிப்பாக, கேரள வாடல் நோய், வெள்ளை பூச்சி தாக்குதல், இலை கருகல் போன்றவற்றால் தென்னை மரங்களில் காய்க்கும் காய்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதாக, விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இந்தச் சூழலில்தான், பொள்ளாச்சி பொன்னாயூர் பகுதியைச் சேர்ந்த அரவிந்த் விஜய் என்பவர் மாற்று விவசாயத்தில் இறங்கி பலரது கவனத்தை ஈர்த்துள்ளார். வேளாண்மையில் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்ற அவர், ஒரு ஏக்கர் பரப்பளவில் பசுமை குடில் அமைத்து ஆங்கில வெள்ளரிக்காய்களை பயிரிட்டுள்ளார். 120 நாட்கள் இடைவெளியில் 50 டன் வரை வெள்ளரி காய்களைச் சாகுபடி செய்ய முடிவதாக அவர் கூறுவது, மற்ற விவசாயிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தப் பசுமை குடில் அமைக்கச் சுமார் 40 லட்சம் ரூபாய் வரை செலவாவதாகவும், இதில் 17 லட்சம் ரூபாயை அரசு மானியமாக வழங்குவதாகவும் அரவிந்த் விஜய் தெரிவிக்கிறார்.
வெள்ளரி விவசாயத்தை தென்னைக்கு மாற்றாகத் தொடங்கியதாகக் கூறும் அவர், தென்னையை காட்டிலும் வெள்ளரி விவசாயம் மூன்று மடங்கு லாபம் தருவதாகக் கூறுகிறார். இவரைப் போலவே, மேலும் சில விவசாயிகளும் பசுமை குடில் அமைத்துத் தக்காளி, உயர் ரக அழகு பூக்கள் உள்ளிட்டவற்றை பயிர் செய்து வருகின்றனர்.
சீதோஷன நிலை ஒத்துழைத்தால் அத்தகைய விவசாயமும் வெற்றிப்பெறும் என அரவிந்த் விஜய் தெரிவித்துள்ளார். மேலும், சந்தைகளின் தேவைக்கு ஏற்ப அதிக வெள்ளரிக்காய்களை தன்னால் உற்பத்தி செய்ய முடியவில்லையென கூறும் அவர், மற்ற விவசாயிகளும் பசுமை குடில் வெள்ளரி விவசாயம் செய்ய முன்வந்தால், உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தை உருவாக்கி அதிக விளைச்சல் மேற்கொள்ள முடியும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
அதன் மூலம் அனைவரும் அதிகப்படியான லாபம் ஈட்ட முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். வேளாண் பட்டதாரி இளைஞரின் இந்தப் புதிய முயற்சிக்கு மற்ற விவசாயிகளிடம் ஆதரவு பெருகி வருகிறது. தென்னை விவசாயத்திற்கு இணையாக, பசுமை குடில் விவசாயத்தை மேற்கொள்ளப் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.