ஐ.நா. அவையில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்திருப்பதன் மூலம் இந்திய தூதர் பெடல் கெலாட் சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளார். பாகிஸ்தானை மிரளவிட்ட இந்திய அதிகாரி யார் என்பதை தற்போது பார்க்கலாம்.
ஐ.நா. அவையில் இந்தியாவை அவமானப்படுத்தும் நோக்கோடு பேசிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீபுக்கு நேருக்கு நேராக ஆணித்தரமாக பதிலடி கொடுத்திருக்கிறார் இந்திய தூதர் பெடல் கெலாட். நெத்தியடி பதிலால், பாகிஸ்தான் பிரதமரை ஷெபாஸ் ஷெரீப்பை தெறிக்கவிட்ட இந்திய தூதர் பெடல் கெலாட் சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளார். டெல்லியில் பிறந்த பெடல் கெலாட், மும்பை செயிண்ட் சேவியர் கல்லூரியில் அரசியல் அறிவியல், சமூகவியல் மற்றும் பிரெஞ்சு இலக்கியத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றவர்.
டெல்லியில் உள்ள லேடி ஸ்ரீ ராம் மகளிர் கல்லூரியில் அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர். கலிஃபோர்னியாவில் உள்ள மிட்டில்பரி சர்வதேச கல்வி நிறுவனத்தில் மொழிபெயர்ப்பு பிரிவில் முதுகலை படிப்பை முடித்திருக்கிறார்.
2015ம் ஆண்டு IFS ஆக சர்வீஸை தொடங்கிய அவர், 2020 முதல் 2023 வரை ஐரோப்பிய மேற்கு மண்டலத்தில் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் கீழ் செயலாளராகப் பணியாற்றினார். அப்போது பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் மற்றும் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய தூதரகங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
2023ம் ஆண்டு ஜூலையில் ஐ.நாச்சபையில் இந்தியாவின் முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டார். ஒருபுறம் பாகிஸ்தான் பிரதமருக்குச் சாட்டை அடி பதில் கொடுத்திருக்கும் பெடல் கெலாட், இசைக் கருவிகளையும் இசைப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். கிட்டார் வாசித்துக் கொண்டே பாடும் வீடியோக்களை அவ்வப்போது சமூகவலைதளங்களில் பார்க்கவும் முடியும்.