கரூரில் தவெக பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்தவர்கள் மற்றும் இறந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், எல்.முருகன் ஆகியோர் ஆறுதல் கூறினர்.
கரூரில் தவெக தலைவர் நடிகர் விஜய்யின் பிரசார கூட்டத்தின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், கூட்ட நெரிசல் ஏற்பட்ட வேலுசாமிபுரத்தில் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், எல்.முருகன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இதனை தொடர்ந்து, கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து மத்திய அமைச்சர்கள் நலம் விசாரித்தார். அவர்களுடன் பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் உடனிருந்தனர்.
இதையடுத்து கரூர் மாநகராட்சிக்குட்பட்ட கருப்பாயி கோயில் தெருவில் உயிரிழந்தவர்களின் வீட்டிற்கு சென்ற மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், எல்.முருகன், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
அப்போது கூட்டத்திற்கு போலீசார் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யவில்லை என்று பாதிக்கப்பட்டவர்கள் முறையிட்டனர்.
அப்போது முறையாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதியளித்தார்.