இட்லி ஒரு உன்னதமான படைப்பு எனக் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கருத்து தெரிவித்திருந்த நிலையில், அவரது இல்லத்திற்கு ஸ்விக்கி நிறுவனம் சார்பில் இட்லி பார்சல்கள் அனுப்பி வைக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
தென்னிந்திய உணவான இட்லி – தோசை, இவற்றில் எது சிறந்தது என்ற விவாதம் சமூக வலைதளத்தில் சூடு பறக்க நடந்தது. அதில், ஒருவர் தோசை பற்றிக் கூற வார்த்தைகளே இல்லை என்றும், ஆனால், நன்கு வேகவைக்கப்பட்ட இட்லியை கண்டு வருந்துகிறேன் எனவும் கருத்து தெரிவித்திருந்தார்.
இதற்குப் பதிலளித்து காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் வெளியிட்ட பதிவில், குறை காண்பவர்களால் நிச்சயம் நல்லதை அனுபவிக்கவே முடியாது என்றும், உண்மையிலேயே இட்லி ஒரு சிறந்த உணவு, அது வெண் மேகம் போன்றது எனக் குறிப்பிட்டிருந்தார்.
அரிசியும் உளுந்தும் கலந்த லேசான உணவு என்பதால் நாவில் பட்டதும் உருகிவிடும் அளவுக்குப் பஞ்சு போல மென்மையாக ஆவியில் வேக வைக்கப்பட்டது எனவும் சசிதரூர் இட்லியை புகழ்ந்தது சமூக வலைதளங்களில் வைரலாகியது.
இந்தச் சூழலில், சசி தரூரின் இல்லத்திற்கு ஸ்விக்கி நிறுவனம் இட்லி பார்சல்களை தங்களது ஊழியர்கள் மூலம் அனுப்பி வைத்திருந்தது.
அவர்களுடன் பார்சலை வாங்கி கொண்டு சசி தரூர் நிற்கும் புகைப்படம் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.