வரும் 2050ம் ஆண்டுக்குள் புற்றுநோய் மரணங்கள் 75% அதிகரிக்கும் என்றும், அதில் இந்தியா கடுமையாகப் பாதிக்கப்படும் என்றும் லான்செட் ஆய்வு எச்சரித்துள்ளது.
உலகளவில் புற்றுநோய் மரணங்கள் வரும் 2050ம் ஆண்டுக்குள், தற்போதுள்ளதை விட 75 சதவீதம் வரை அதிகரிக்கும் என ‘லான்செட்’ மருத்துவ இதழ் வெளியிட்டுள்ள ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இதன்மூலம், ஆண்டுக்கு 1.86 கோடி பேர் உயிரிழப்பார்கள் என்றும், புதிதாக 3.05 கோடி பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுவார்கள் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
உலக மக்கள் தொகையின் பெருக்கம், வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களே இந்த அபாயகரமான உயர்வுக்கு முக்கிய காரணங்களாகக் கூறப்பட்டுள்ளன.
இதற்கிடையே அடுத்த 25 ஆண்டுகளில் உலகளவில் சிறுநீரக புற்றுநோய் பாதிப்பு இரட்டிப்பாகும் என்று ஃபாக்ஸ் சேஸ் புற்றுநோய் மைய ஆராய்ச்சியாளர்கள் நடத்திய புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
2022 ஆம் ஆண்டில் உலகளவில் சுமார் 4 லட்சத்து 35 ஆயிரம் புதிய சிறுநீரக புற்றுநோய் பாதிப்புகளும் ஒரு லட்சத்து 56 ஆயிரம் இறப்புகளும் பதிவாகியுள்ளன. தற்போதைய போக்குகள் தொடர்ந்தால், 2050 ஆம் ஆண்டுக்குள் அந்த எண்ணிக்கை இரட்டிப்பாகும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.