சொன்ன தேதியில் சொன்ன நேரத்தில் போர் விமானங்களைத் தயாரிக்க முடியாமல் தட்டு தடுமாறும் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தை மறுசீரமைப்பு செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்.
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட், இந்திய ராணுவத்துக்கு தேவையான போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், பாதுகாப்பு தளவாடங்களை தயாரிப்பதற்காகத் தோற்றுவிக்கப்பட்டது. சமீபகாலமாக, இந்நிறுவனத்தால் சரியான நேரத்தில் ஆர்டர் டெலிவரி செய்யமுடியவில்லையெனக் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
இந்திய ராணுவத்துக்கு நாளுக்கு நாள் சவால்கள் அதிகரிப்பதை உணர்ந்துள்ள மத்திய அரசு, நவீன பாதுகாப்பு தளவாடங்களைத் தயாரிக்க வேண்டும் என முனைப்புடன் செயல்படுகிறது. ஆனால், போர் விமானங்கள், ஹெலிகாப்டர்களை தயாரித்து வரும் இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனம் குறித்த நேரத்தில் ஆர்டர் டெலிவரி செய்ய முடியாமல் தடுமாறி வருகிறது.
அதாவது, 2 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்கள் தேக்க நிலையிலேயே இருப்பதாகக் கூறப்படுகிறது. நடப்பாண்டிலும் ஏராளமான ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டபோதிலும் முன்னேற்றம் இல்லாத நிலை காணப்படுகிறது. சமீபத்தில் கூட, 97 தேஜஸ் மார்க் 1-ஏ போர் விமானங்களை வாங்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
66 ஆயிரத்து 500 கோடி மதிப்பிலான ஒப்பந்தம், இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனத்தின் வரலாற்றுசாதனையாகப் பார்க்கப்படுகிறது. ஆனால் என்ன பயன்?… 2021-ம் ஆண்டில் 46 ஆயிரத்து 800 கோடியில் போடப்பட்ட ஒப்பந்தத்திற்கே, அடுத்த மாதம் தான் 83 தேஜஸ் விமானங்கள் இந்திய விமானப்படையிடம் ஒப்படைக்கப்பட உள்ளன.
அமெரிக்க நிறுவனத்திடம் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் படி, 99 GE-F404 turbofan என்ஜின்களை வாங்குவதில் தாமதம் ஏற்பட்டது இதற்குகாரணமாகக் கூறப்படுகிறது. இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் நிறுவனத்தின் ஆண்டு வருமானத்தைவிட, தேக்க நிலையில் உள்ள ஆர்டர் மதிப்பு, எட்டு மடங்கு அதிகமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதையெல்லாம் கருத்தில் கொண்டே, இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனத்தில் நிர்வாக ரீதியாக மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நிறுவனத்தின் செயல்பாடுகளை விரைவுபடுத்த, நிபுணர்களின் கருத்துகள் கேட்கப்பட்டுள்ளதாகவும், அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு கூட, நிர்வாக ரீதியான மறுசீரமைப்பை மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டு, போதிய ஆர்டர்கள் இல்லாததன் காரணமாகத் திட்டம் கைவிடப்பட்டதாகப் பாதுகாப்புத்துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். போர் விமானங்களை தயாரிக்கவும், பழுது பார்க்கவும், பராமரிக்கவும் தனித்தனி பிரிவுகள் உருவாக்கப்பட்டால், இந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனம் உற்பத்தியில் மேம்பட்டு நிற்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
















