பங்குச்சந்தையில் இறங்கும் திட்டம் இல்லை என்று ZOHO நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார். முதலீட்டாளர்களின் அழுத்தம் நிறுவன நிர்வாகங்களில் குழப்பத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறியுள்ளார். இது பற்றிய ஒரு செய்தித்தொகுப்பை பார்க்கலாம்.
10 ஆண்டுகளுக்கு முன்னதாக, அமெரிக்காவில் அதிக சம்பளம் பெற்ற வந்த நல்ல வேலையை விட்டுவிட்டு, எந்த வெளிப்புற நிதியுதவியும் இல்லாமல் தமிழகத்தில் ஒரு கிராமத்தில், உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனத்தை உருவாக்கும் இலட்சியத்துடன் இந்தியா திரும்பிய ஸ்ரீதர் வேம்பு, ZOHO நிறுவனத்தை தொடங்கினார். மைக்ரோசாப்ட், கூகுள், மெட்டா போன்ற தொழில்நுட்ப ஜாம்பவான்களுடன் போட்டியிடக்கூடிய வணிக மென்பொருளைஉருவாக்கிச் சாதனை படைத்தார் ஸ்ரீதர் வேம்பு.
சுமார் 180-க்கும் மேற்பட்ட நாடுகளில், 100 மில்லியனுக்கும் அதிகமான மக்களால் பயன்படுத்தப்படும் 50 க்கும் மேற்பட்ட கிளவுட் அடிப்படையிலான மென்பொருள் தயாரிப்புகளை ZOHO நிறுவனம் உருவாக்காகியுள்ளது. மின்னஞ்சல் தொடங்கி வணிக மேலாண்மை வரை ZOHO-வின் மென்பொருட்கள் உலக அளவில் சிறந்த தயாரிப்புகளாகப் பாராட்டப்படுகின்றனன. ZOHO வின் சிறந்த தொழில்நுட்ப முயற்சிக்கு உதாரணமாக அரட்டை (Arattai) மெசஞ்சர் செயலியைச் சொல்லலாம். வாட்ஸ் அப் க்கு மாற்றாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த அரட்டை (Arattai) மெசஞ்சர் செயலி 8 kbps என்ற குறைந்த இன்டர்நெட் வேகத்திலும் நன்றாகச் செயல்பட அப்டேட் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதே போல், GMAIL-க்கு போட்டியாக ZOHO மெயில் சேவையும் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, எப்போதும் சுதேசி பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும் என்று பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று, நாடு முழுவதும் மக்கள், சோப்பு, சீப்பு, கண்ணாடி முதல் மின்னஞ்சல், வாட்ஸ் அப் என பரவி வரும் தொழில்நுட்ப சேவைகள் வரை இந்தியாவில் தயாரித்த பொருட்களை வாங்குவதில் தீவிர ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த 7 நாட்களில் ஜோஹோமெயில் 50 லட்சத்துக்கும் மேல் பதிவிறக்கம் செய்யப்பட்டு சாதனை படைத்துள்ளது.
ZOHOவின் அரட்டை பதிவுகள் ஒரு நாளைக்கு 3,000 இலிருந்து ஒரு நாளைக்கு 3.5 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் ஆப் ஸ்டோர் தரவரிசையில் மூன்று நாட்களிலேயே முதலிடத்தைப் பிடித்துச் சாதனை படைத்துள்ளது ZOHO. மிகச்சிறந்த தனியுரிமை மற்றும் பாதுகாப்பை வழங்கும் வகையிலும், அதே நேரத்தில் மிக எளிதாகப் பயன்படுத்தக்கூடியதாகக வகையிலும், பல முக்கிய அம்சங்களுடன் புதிய அரட்டை (Arattai) மெசஞ்சர் செயலி வரும் நவம்பரில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. ZOHO அரட்டை வழக்கமான அம்சங்களுடன் செய்தி அனுப்புதல், அழைப்புகள், குரல் குறிப்புகள், மீடியா பகிர்வு மற்றும் ஆண்ட்ராய்டு டிவிக்கான ஆதரவையும் வழங்கும் என்று கூறப்படுகிறது.
ஏற்கெனவே எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷனையும் ZOHO அரட்டை வெளியிட்டுள்ளது. இதற்காக ZOHO நிறுவனத்தில் பணிபுரியும் பொறியாளர்கள் 24 மணி நேரமும் உழைத்து வருவதாக அதன் இணை நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார். ZOHO க்குக் கிடைத்துள்ள மகத்தான வரவேற்பைத் தொடர்ந்து அந்நிறுவனம் பங்குசந்தையில் நுழைய வேண்டும் என்ற யோசனையைப் பல முன்னணி முதலீட்டாளர்கள் முன்வைத்துள்ளனர்.
இந்நிலையில், ZOHO இணை நிறுவனரும் தலைமை செயல் அதிகாரியுமான ஸ்ரீதர் வேம்பு வேறு விதமான கருத்தைத் தெரிவித்துள்ளார். அதாவது Zoho ஒரு பொது பட்டியலிடப்பட்ட நிறுவனமாக இருந்திருந்தால், Arattai என்ற செயலி தயாரிக்கும் வாய்ப்பே இருந்திருக்காது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், ஒரு செயலியை உருவாக்குவதில் உள்ள நீண்ட தூர R&D, காலாண்டுக்கு காலாண்டு சந்தை அழுத்தங்களைத் தாங்க முடியாது என்றும் சுட்டிக் காட்டியுள்ளார்.
இன்னும் ஒரு படி மேலே சென்று ZOHO ஒரு மென்பொருள் நிறுவனம் மட்டுமல்ல, தனக்கு தானே நிதியளிக்கும் ஒரு அறிவியல் ஆராய்ச்சி ஆய்வகமாகும் என்றும் கூறியுள்ளார். பொதுச் சந்தைக்கு வரும் போது,எப்போதுமே பங்குகளின் மதிப்பை உயர்த்துவதில் மட்டுமே கவனம் செலுத்தும் முதலீட்டாளர்களின் அழுத்தம் நிறுவன நிர்வாகங்களில் குழப்பத்தை ஏற்படுத்தும் என்றும் ஸ்ரீதர் வேம்பு தெளிவுபடுத்தியுள்ளார்.
பிற முதலீட்டாளர்கள் நிதியை நிராகரித்து, இந்திய கிராமப்புற மேம்பாட்டில் கவனம் செலுத்துவதன் மூலம், உலகத் தரம் வாய்ந்த நிறுவனங்களை வெற்றிகரமாக கட்டமைக்க முடியும் என்பதை ஸ்ரீதர் வேம்பு நிரூபித்து வருகிறார் என்று பொருளாதார வல்லுநர்கள் பாராட்டுகின்றனர்.
















