வைகையாற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வில் தொடங்கி பாட்டி வடை சுடும் கதை வரை ஐந்தாயிரத்திற்கும் அதிகமான கொலுபொம்மைகள் அடங்கிய கொலு கண்காட்சி பார்வையாளர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. மதுரையைச் சேர்ந்த அசோகன் – ராஜலட்சுமி தம்பதி தங்கள் இல்லத்தில் அலங்கரித்து வைத்திருக்கும் கொலு கண்காட்சி குறித்து இந்தச் செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.
மதுரை மாவட்டம் ஜீவாநகர் அருகே உள்ள தென்றல் நகர் பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பொதுப்பணித்துறை அதிகாரி அசோகன் மற்றும் அவரது மனைவி ராஜலட்சுமி ஆகியோர் ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி விழாவின் போது பிரம்மாண்ட கொலு அமைத்து கொண்டாடுவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் நடப்பாண்டில் இந்த தம்பதி ஏற்பாடு செய்துள்ள கொலு பண்டிகையில் மதுரை விளாச்சேரி, வில்லியனூர், மாயவரம், காஞ்சிபுரம், திருநெல்வேலி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கொலு பொம்மைகள் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளன.
ஆரம்பத்தில் 5 படிகளில் தொடங்கி கொலு கண்காட்சி தற்போது 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொம்மைகளை உள்ளடக்கிய 138 படிகளாக உயர்ந்துள்ளது. மீனாட்சி தேர், அழகர் வைகையில் இறங்குதல், அத்திவரதர், மைசூர் மகாராஜா பவனி வருதல், நவ நாயகிகள், சோட்டா பீம் ஆகியவற்றோடு வரலாற்றுக் கதைகளைத் தத்ரூபமாக விளக்கும் பொம்மைகளும் இடம்பெற்றுள்ளன.
நடப்பாண்டில் முருக பக்தர்கள் மாநாட்டில் காட்சிபடுத்தப்பட்டது போல முருகனின் அறுபடை வீடுகளை டிஜிட்டல் முறையில் தயாரித்திருப்பது பார்வையாளர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. அதிலும் ராமர் கோவில், மதுரையின் சிறப்புமிக்க திருவிழாக்களில் ஒன்றான வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வும் கொலு பொம்மைகளால் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளன யோகாசனம் செய்யும் சித்தர்கள், முனிவர்கள், நரசிம்மர் பள்ளி கொண்ட பெருமாள், ஆகியவை பார்வையாளர்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளன. திருமண வைபம், வளைகாப்பு, குழந்தை பேறு, காது குத்துதல் என வாழ்வியலை எடுத்துரைக்கும் கொலு பொம்மைகளும் இக்கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.
கொலு பொம்மைகளை பார்வையிட வரும் அனைவருக்கும் வெற்றிலை பாக்கு வைத்து அழைத்திருப்பது கூடுதல் சிறப்பாக அமைந்திருக்கிறது. கொலு பொம்மைகள் தயாரிக்கும் கைவினை கலைஞர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் நடைபெறும் இந்த நவராத்திரி பண்டிகைக்காகப் பல்வேறு பகுதிகளில் இருந்து கொலு பொம்மைகள் கொண்டு வரப்பட்டு அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளன.
சிங்கத்தை ஏமாற்றிய நரியின் கதை, பாட்டி வடை சுடும் கதை பல்வேறு விதங்களில் அமைக்கப்பட்டிருக்கும் கொலு கண்காட்சி பார்வையாளர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்து மதத்தின் கலாச்சாரம் பண்பாடு, தொன்மை ஆகியவற்றை மறந்துவிடக் கூடாது என்பதற்காகவே ஒவ்வொரு ஆண்டும் இந்த நவராத்திரி கொலு மக்களின் வழிபாட்டிற்கு வைக்கப்படுவதாக அசோகன் – ராஜலட்சுமி தம்பதியினர் தெரிவித்துள்ளனர்.