மத்திய அரசின் “ஜல் ஜீவன்” திட்டத்தில் அதிகாரிகள் முறைகேடு செய்வதாகக் கூறி தேனி எம்பி தங்க தமிழ்ச்செல்வனை பாஜகவினர் முற்றுகையிட்டனர்.
தேனி ஆட்சியர் அலுவலகத்தில், மத்திய அரசின் திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் தேனி எம்பி தங்க தமிழ்ச்செல்வன் பங்கேற்றார். அப்போது அவரை பாஜகவினர் திடீரென முற்றுகையிட்டனர்.
மாவட்டத்தில் மத்திய அரசின் திட்டங்கள் சரிவரச் செயல்படுத்தவில்லை எனவும், ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் தேனி மாவட்டத்தின் பல கிராமங்களில் குடிநீர் குழாய்கள் பதிக்கப்படவில்லை எனவும் குற்றம்சாட்டினார்.
மேலும் இத்திட்டத்தில் அதிகாரிகள் முறைகேடு செய்வதாகவும் அவர்கள் கூறினர். இதனைக் கேட்ட எம்பி தங்க தமிழ்ச்செல்வன், இது தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.