ஒழுக்கக் கேடு என்று கூறி இணைய சேவையைத் தாலிபான்கள் துண்டித்ததால், ஆப்கானிஸ்தான் நாடு தழுவிய தொலைத்தொடர்பு முடக்கத்தை சந்தித்து வருகிறது. தலிபான் அரசின் இந்த நடவடிக்கை, லட்சக்கணக்கான மக்களின் தகவல் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் பாதிக்கப் பட்டுள்ளன. அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
ஆப்கானிஸ்தானில் கடந்த 2021 ஆம் ஆண்டு, அமெரிக்க படைகள் வெளியேறியதைத் தொடர்ந்து, அந்நாட்டில் தலிபான்கள் ஆட்சி அமைத்தனர். இதையடுத்து அந்நாட்டில் தலிபான்கள் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். குறிப்பாக, பெண்கள் மற்றும் சிறுமிகள் ஆப்கானில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உயர்நிலைக் கல்வி பெண்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு, செவிலியர் போன்ற சுகாதார கல்வியும் பெண்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானின் 9,350 கிலோ மீட்டர் fibre-optic நெட்வொர்க், 2021க்கு முன்பிருந்த அமெரிக்க ஆதரவு ஆட்சியில் கட்டமைக்கப்பட்டது. நாட்டின் ஒருங்கிணைப்புக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் fibre-optic தொலைத்தொடர்பு உயிர்நாடியாக இருந்து வந்தது.
கடந்த ஆண்டு, ஆப்கானிஸ்தானை வறுமையிலிருந்து மீட்டெடுப்பதற்கும் பரந்த உலகத்துடனான உறவுகளை வலுப்படுத்துவதற்கும் fibre-optic தொலை தொடர்பு பெரும் உதவியாக இருக்கிறது என்று தலிபான் அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில், வடக்கு ஆப்கானிஸ்தானின் ஐந்து மாகாணங்களில் இணைய சேவைகளுக்குத் தாலிபான் நிர்வாகம் தடை விதித்தது. தலிபான் தலைவர் ஹிபதுல்லா ஆகுந்த்சதா (Hibatullah Akhundzada) இதற்கான உத்தரவைப் பிறப்பித்தார்.
சென்ற செப்டம்பர் 15 ஆம் தேதி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதும், பால்க் மாகாணத்தில் (Balkh) இணைய சேவை முற்றிலுமாக முடக்கப்பட்டது. தலிபான்கள் ஆட்சிக்கு வந்ததில் இருந்து இணைய சேவைக்குத் தடை விதிப்பது இதுவே முதல் முறையாகும். மறு அறிவிப்பு வரும் வரை இந்தத் தடை அமலில் இருக்கும் என்று ஒரு தலிபான் அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஒழுக்கக்கேடு என்று அறிவித்து, தலிபான் அரசு fibre-optic தொலை தொடர்பு சேவைக்குத் தடை விதித்ததால், ஆப்கானிஸ்தான் தற்போது நாடு தழுவிய தொலைத்தொடர்பு முடக்கத்தை சந்தித்து வருகிறது.
இணைய கண்காணிப்பு அமைப்பான நெட்பிளாக்ஸ், ஆப்கானிஸ்தான் “முழுமையான இணைய முடக்கத்தில்” இருப்பதாக உறுதிப்படுத்தியுள்ளது. இதன் காரணமாகத் தலைநகர் காபூலில் உள்ள தங்கள் அலுவலகங்களுடன் தொடர்பு கொள்ள முடியவில்லை என சர்வதேச செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. நாடு முழுவதும், மொபைல் இணையம் மற்றும் செயற்கைக்கோள் தொலைக்காட்சி சேவைகளும் பாதித்துள்ள நிலையில், ஆப்கானிஸ்தானின் தனியார் செய்தி சேனலான டோலோ நியூஸ், தங்கள் சமூக ஊடகப் பக்கங்களைப் பின்தொடருமாறு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
வங்கி மற்றும் அனைத்து வணிக நிறுவனங்கள் மட்டுமில்லாமல் அரசு அலுவலகங்களும் பாதிப்படைந்துள்ளன. இணைய முடக்கம் காரணமாக, காபூலுக்கான விமானச் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. காபூலுக்கு வரும் மற்றும் காபூலில் இருந்து புறப்படும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டதாக விமான கண்காணிப்பு சேவையான Flightradar24 தெரிவித்துள்ளது.
இந்த முடக்கம் “முழு நாட்டையும் தனிமையில் ஆழ்த்தியதாகத் தெரிவித்துள்ள ஆப்கானிஸ்தான் செய்தி சேனலான 1TV-யின் முன்னாள் தலைமை ஆசிரியர் ஹமீத் ஹைதாரி, இணைய முடக்கத்தில் வட கொரியாவைப் பின்னுக்குத் தள்ளி ஆப்கான் முதலிடத்தை அதிகாரப்பூர்வமாகப் பிடித்துள்ளதாக விமர்சனம் செய்துள்ளார்.
ஆப்கானிஸ்தானுக்கான முன்னாள் அமெரிக்க தூதர் ஸல்மே கலீல்சாத், தலிபான்களின் இணையத் தடையை “அபத்தமானது” என்று கண்டித்துள்ளார். இதேபோல், ஆப்கானிஸ்தானுக்குள் இருந்து ஆப்கான் குரல்கள் இல்லாத இணையம் காது கேட்காத தன்மையில் அமைதியாக உள்ளது என்று அமெரிக்காவைச் சேர்ந்த ஆப்கானிஸ்தான் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மரியம் சோலைமன்கில், தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, இந்த மாத தொடக்கத்தில் பெண்கள் எழுதிய நூல்களைப் பல்கலைக்கழக பாடத்திட்டங்களிலிருந்து தலிபான் நீக்கினர். மனித உரிமைகள் மற்றும் பாலியல் துன்புறுத்தல் குறித்து கற்பிப்பதை தடைசெய்யும் நோக்கத்தில் கொண்டு வந்தது என்று தாலிபான்கள் விளக்கமளித்தனர்.
ஒழுக்கக்கேடு என்று சொல்லி நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்குத் தடை விதித்து ஒரு நாட்டையே பல்லாண்டு காலம் பின்னோக்கி இழுத்து சென்றுள்ளனர் தலிபான்கள் என்று சமூக அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளார்.
















