நாட்டின் முன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸ் தங்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்திப் பணியில் இருந்து நீக்குவதாக முன்னாள் ஊழியர்கள் சமூக வலைதளங்களில் குற்றம்சாட்டி வருகின்றனர்.
எதிர்கால சூழலுக்கு ஏற்ப நிறுவனத்தைத் தயார்படுத்துவது என்ற திட்டத்தின் கீழ், பல்வேறு தொழில்நுட்பம் அம்சங்களில் டிசிஎஸ் நிறுவனம் முதலீடு செய்து வருகிறது. அதற்கு ஈடாக ஊழியர்கள் எண்ணிக்கையை மறுக்கட்டமைப்பு செய்வதாக, 12 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அண்மையில் அறிவித்தது.
இதனால், ஒட்டுமொத்த அலுவலகமே ஒருவிதமான கலக்கத்தில் இருப்பதாக முன்னாள் மற்றும் இந்நாள் ஊழியர்கள் சமுக வலைத்தளங்களில் கதறி வருகின்றனர். பல ஆண்டுகாலம் நிறுவனத்திற்காக உழைத்தவர்களைகூட ஒரே நாளில் வீட்டிற்கு அனுப்புவதாகவும், இதனால் யாருக்கு எப்போது வேலை பறிபோகுமோ என்ற அச்சத்திலேயே ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள் என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
நிறுவனத்திற்காக 13 ஆண்டுக் காலம் வேலை செய்திருப்பதாகவும், ஆனால் ஐந்து மாதங்களாக டிசிஎஸ் நிறுவன HR பிரிவு அதிகாரிகள் பணிச்சுமை அளித்து, வேலையை விட்டு நீக்கியதாகவும் அண்மையில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.